அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் செயல்பட்டு வந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி அன்று உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார் என அவர் சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டது.
அதே சமயம், ஜெயாவின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் எனவே ஜெயா மரணம் குறித்து நடுநிலையானதோர் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல தரப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போதைய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியைக்கொண்டு ஜெயாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதி விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்.
ஆறுமுகசாமியின் நீதி விசாரணை கமிஷனில், ஜெயாவின் உயிர்த்தோழி சசிகலா தொடங்கி தொடர்புடையோர் அனைவரும் ஆஜராகி ஜெயா மரணம் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துக்கொண்டிருக்க கூடிய சூழலில், பொதுமக்களும் – இன்னபிற தரப்புகளும் அதிர்ச்சியடையும் வண்ணம் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கமிஷனில் சொல்லப்பட்டுவருகிறதாம்.
ஆம், ஜெயா மரணம் குறித்து சசிகலா தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில் உள்ள தகவல்களுக்கும், அப்போலோ ஊழியர்கள் தெரிவிக்கும் கருத்துக்கும் எண்ணற்ற முரண்கள் உள்ளதாம்.
அதே போன்று, சிசிடிவி கேமராக்கள் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் தகவல்களை மாற்றி மாற்றி கூறி வருகிறது. இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்துள்ளதாம் விசாரணை கமிஷன்.
முன்னதாக, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயாவை சந்திக்க அரசு உயர் அதிகாரிகள் துவங்கி யாரையும் சசி தரப்பு அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.