கடவுளின் சக்தியைப் பரிசோதிக்க கோவிலைப் பூட்டிய பக்தர்கள்…!!

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெலகாவி அருகே அகசாகா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகவே உள்ளனர்.ஊருக்கு பொதுவாக மாசானகவ்வா என்ற கோவில் உள்ளது. இங்கு மாயாசி தேவி என்ற சாமி இருக்கிறது. மாயாசி தேவி மிக சக்தி வாய்ந்த கடவுள் என கிராம மக்கள் நம்புகிறார்கள்.இந்த கிராமத்தில் திருட்டு எதுவும் நடப்பதில்லை. இதனால் வீட்டு கதவையும் அவர்கள் பூட்டுவது இல்லை. மக்கள் தங்கள் விவசாய கருவி போன்றவற்றை வயலிலேயே விட்டு விட்டு வந்து விடுவார்கள். அல்லது வீட்டின் முன்பக்கம் போட்டு இருப்பார்கள்.அந்த கருவிகள் திருட்டு போகாது. அதை மாயாசி தேவி பாதுகாப்பார் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இதனால்தான் அவற்றை பாதுகாப்பாக வைப்பதில்லை.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை அந்த ஊரில் திருட்டு எதுவும் நடந்ததில்லை.இந்த நிலையில் மாசான கவ்வா கோவிலில் உள்ள 18 பித்தளை மணிகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது, கிராம மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஊரில் எந்த திருட்டும் போகாமல் காப்பாற்றும் சாமி கோவிலிலேயே திருட்டு நடந்திருப்பதால் அவர்கள் வேதனை அடைந்தனர். மக்கள் அனைவரும் கோவில் முன்பு திரண்டனர்.

மிகவும் சக்தி வாய்ந்த கடவுளான மாயாசி தேவி திருட்டு போன மணிகளை திரும்ப கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் கோவிலுக்கே வர மாட்டோம். மேலும் பூஜையும் செய்ய மாட்டோம் என்று அவர்கள் முடிவு எடுத்தனர்.மேலும், அவர்கள் கோவில் கதவை சங்கிலியால் இழுத்து பூட்டினார்கள். கடந்த சனிக்கிழமை திருட்டு போனது. 9 நாட்களுக்குள் திருட்டு போன மணிகளை சாமி திருப்பி கொண்டு வர வேண்டும் என்றும் கெடுவும் விதித்து இருக்கிறார்கள்.

எப்படியும் சாமி மணிகளை கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையோடு காத்து இருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது? என்பது இனிமேல்தான் தெரிய வரும்.இந்த கோவிலில் 80 ஆண்டுகளுக்கு முன்பு இது போல் ஒரு தடவை திருட்டு நடந்ததாம். கோவிலில் உள்ள சில பொருட்களை திருடர்கள் எடுத்து செல்ல முயன்றனர். அப்போது சாமி சக்தியால் திருடர்களால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவர்களை இழுத்துப் பிடித்துள்ளது.

இதனால், திருட்டு போன பொருட்களை அங்கேயே போட்டு விட்டு சென்றார்களாம். அதே போன்ற அதிசயம் இப்போதும் நடக்கும். மணிகள் எப்படியும் திரும்பி வந்து விடுமென கிராம மக்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.