சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் -க்கு சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் நவாஸ் ஷெரீஃப் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதனையடுத்து அவர் ஜூலை 13 -ம் தேதி கைது செய்யப்பட்டார். லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய போது விமான நிலையத்திலே அவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டனர்.
தற்போது நவாஸ் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு நோய் இருப்பதால் சிறையிலே அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஊடகம் ஒன்று, “சிறையில் முன்னாள் பிரதமருக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவரது சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகவும், அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்படவேண்டும் எனவும் சிறைத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும்” தெரிவித்துள்ளது. மேலும் சிறையில் இருக்கும் மருத்துவமனையில் இதற்குச் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு வசதிகள் போதுமானதாக இல்லை. அதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லை என்றால் இரவு நேரங்களில் நிலைமை மோசமாகலாம். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது. உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரித்துக் காணப்படுகிறது. இதயத்துடிப்பும் அதிகமாகக் காணப்படுகிறது. அதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. எனினும் அவரின் உடல் நிலை குறித்து சிறைத்துறை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நவாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.