மதுவால் இறந்ததாகக் கருதிய டிரைவரின் மரணத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுவில் சயனைடு கலந்து அவரை இளம்பெண் ஒருவர் நண்பர் மூலம் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கார் டிரைவர். இவரின் மனைவி நளினி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 15-ம் தேதி ராஜேஷ், அவரின் நண்பர் குமரேசனுடன் மதுஅருந்தினார். மறுநாள் காலை ராஜேஷ், இறந்துக்கிடந்தார். தொடர்ந்து அவரின் உடலை அந்தப்பகுதியில் உள்ள மயானத்தில் உறவினர்கள் புதைத்தனர். கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி நளினி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் விசாரித்தார். விசாரணையில் ராஜேஷ், திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நளினி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது ராஜேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று ராஜேஷ், அவரின் நண்பர் குமரேசன் மற்றும் சிலர் சேர்ந்து வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் மதுஅருந்தியுள்ளனர். அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தோம். அப்போது அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ராஜேஷ் வருவதற்கு முன்பு மதுபானத்தைத் திறந்த குமரேசன் அதில் எதையோ ஒன்றைக் கலப்பது பதிவாகியிருந்தது. அதன்பிறகு குமரேசன் போனில் பேசும் காட்சியும் இடம்பெற்றியிருந்தது. இதனால், குமரேசனிடம் விசாரித்தோம். அவர், முன்னுக்குபின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது ராஜேஷை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். `எதற்காக கொலை செய்தாய்’ என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ராஜேஷுக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த பத்மாவதிக்கும் பழக்கம் இருந்துள்ளது. பத்மாவதி திருமணமானவர். இவர்களின் நட்பு, குமரேசனுக்கும் தெரியும். இந்த நிலையில் பத்மாவதியும் குமரேசனும் பழகியுள்ளனர். அதன்பிறகு ராஜேஷுடன் பழகுவதை பத்மாவதி நிறுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜேஷ் உயிரோடு இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்று பத்மாவதி கருதியுள்ளார். இதனால், ராஜேஷைக் கொலை செய்ய பத்மாவதியும் குமரேசனும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்மாவதி, ஆந்திர மாநிலம் நெல்லூருக்குச் சென்றார். அங்கு அவரின் மாமனார், நகை செய்யும் வேலை செய்கிறார். நகைகளை பாலீஸ் செய்வதற்காக சயனைடுகளைப் பயன்படுத்துவார்கள். அதை யாருக்கும் தெரியாமல் திருடிய பத்மாவதி, சென்னைக்கு கொண்டுவந்து குமரேசனிடம் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று மதுபானத்தில் குமரேசன் அதைக் கலந்து கொடுத்து ராஜேஷை கொலை செய்தது தெரியவந்தது. இந்தக் கொலைக்கு காரணமான குமரேசன், பத்மாவதி ஆகியோரை கைது செய்துள்ளோம்” என்றனர்.
கொலையை கண்டுபிடிக்க உதவிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
அளவுக்கு அதிகமான குடியால் ராஜேஷ் இறந்துவிட்டார் என்று அவரின் உறவினர்கள் கருதியுள்ளனர். இந்தச் சமயத்தில் ராஜேஷின் நண்பர்களில் ஒருவரான அரசியல் பிரமுகர், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியுள்ளார். அந்த போஸ்டர் குறித்து போலீஸார் சர்வசாதாரணமாக விசாரித்துள்ளனர். அப்போதுதான் ராஜேஷ் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகத் தொடங்கியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், சிசிடிவி கேமராக்களைப் பொருத்துமாறு சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதன்படி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராதான் ராஜேஷ் கொலையைக் காட்டிக் கொடுத்துள்ளது.
கைதான பத்மாவதி போலீஸாரிடம் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், “நான் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் ராஜேஷை சந்தித்தேன். அதன்பிறகு நாங்கள் பழகினோம். அவருடன் குமரேசன் அடிக்கடி வீட்டுக்குவருவார். குமரேசனுடன் நான் பழகியது ராஜேஷுக்குப் பிடிக்கவில்லை. மேலும் ராஜேஷ், எனக்கு பல வகையில் தொல்லை கொடுத்தார். என்னுடைய கணவரையும் குழந்தைகளையும் மிரட்டினார். இதனால்தான் நெல்லூரிலிருந்து கொண்டு வந்த சயனைடு மூலம் ராஜேஷை குமரேசன் மூலம் கொலை செய்யத் திட்டமிட்டேன். மதுவால் ராஜேஷ் இறந்துவிட்டதாக அவரின் குடும்பம் நம்பியது. இதனால் நிம்மதியாக இருந்தோம். ஆனால், போலீஸார் துப்பு துலக்கி எங்களைக் கண்டுப்பிடித்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
குமரேசன், பி.காம் படித்துள்ளார். தற்போது, கட்டடங்களுக்கு பிளான் போட்டுக் கொடுத்துவருகிறார். ராஜேஷும் குமரேசனும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், பத்மாவதியின் நட்பால் நண்பனைக் கொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ளார் குமரேசன்.