இந்தியாவில் கணவரின் இறுதிசடங்கிற்காக மனைவி மருத்துவமனையில் பிச்சை எடுத்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
ஆந்திராவின் புங்கனூர் மண்டலம், இதிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுசாயிப்(45). கூலித் தொழிலாளியான இவருக்கு தவுலத்பீ என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் பாபுசாயிப் சமீபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி கூறியுள்ளனர்.
ஆனால் கணவரை திருப்பதி கொண்டு செல்வதற்கு பணம் இல்லை என்று தவுலத்பீ கூறியதையடுத்து பாபுசாயிப்பை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து சிகிச்சையளித்த போதும் அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த தவுலத்பீ, அவரை இறுதிச் சடங்கு செய்வதற்கு பணமில்லாமல் தவித்து வந்துள்ளார்.
என்ன செய்வது? யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருப்பவர்களிடம் உதவி செய்யுமாறு பணம் கேட்டுள்ளார்.
இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் மனமிரங்கி அவருக்கு பண உதவி செய்தனர்.
அதன் பின்னர், ஆட்டோ பிடித்து கணவரின் சடலத்தை அதில் ஏற்றிக் கொண்டு சொந்த கிராமத்திற்கு சென்று இறுதி சடங்கை செய்ததாக கூறப்படுகிறது.