அன்று ஏழையின் மகள்…. இன்று பணக்கார வீட்டின் வளர்ப்பு மகள்: நாடு தாண்டி கவனம் ஈர்த்த உண்மை நிகழ்வு

கேரளாவை சேர்ந்த பெண் குழந்தை இல்லாத தம்பதியர் ஏழை குடும்பத்து பெண்ணை தத்தெடுத்து வளர்த்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தது நாடு கடந்து பாராட்டப்பட்டது.

துபாயில் உள்ள டெலிவிஷன் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர் மதனன். 32 வருடங்களாக அங்கு பணிபுரிந்தவர் 2007-ம் ஆண்டு மனைவி தங்க மணியுடன் தனது சொந்த ஊரான திருச்சூருக்கு வந்தார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் முகேஷ், மஸ்கட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்க்கிறார். இரண்டாவது மகன் முகில், குவைத் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.

இருவரும் குடும்பத்துடன் அந்தந்த நாடுகளில்தான் வசிக்கிறார்கள். இரண்டு மகன்களும் அருகாமையில் இல்லாததும், பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கமும் மதனன் -தங்கமணி தம்பதியரை ஆழ்த்தியிருந்தது.

அப்போது கதிஜா என்ற சிறுமியை பற்றிய தகவல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அவளது அம்மா பெயர் சுபேதா. அப்பா பெயர் அப்துல்லா. கஜிதாவுக்கு அக்காள் ஒருவர் இருக்கிறார்.

அப்துல்லா குடும்பத்தை தவிக்க விட்டுவிட்டு பல வருடங்களுக்கு முன்பே காணாமல் போய்விட்டார். அதன் தாக்கமாக சுபேதாவுக்கு மன அழுத்த பாதிப்பும் இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்ப்பதற்காக அருகில் உள்ள ஓட்டலில் மீன் நறுக்கி கொடுப்பது, மசாலா அரைப்பது போன்ற வேலைகளை செய்து வந்திருக்கிறார்.

அதனால் உணவு கிடைத்திருக்கிறது. ஓட்டல் வேலைபோக மீதி நேரங்களில் புல் அறுத்தும் வருமானத்திற்கு வழி தேடியிருக்கிறார். கதிஜாவையும், அவருடைய சகோதரியையும் சமூக அமைப்பு ஒன்றின் உதவியோடு படிக்க வைத்திருக்கிறார்.

அந்த குடும்பத்தின் பரிதாப நிலையை கேள்விப்பட்ட மதனன் – தங்கமணி தம்பதியர் சுபேதாவை தேடி சென்று சந்தித்திருக்கிறார்கள். அப்போது கதிஜா 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கிறார்.

மகள் இல்லாத குறையை கதிஜா மூலம் போக்குவதற்கு மதனன் – தங்கமணி தம்பதியர் முடிவெடுத்திருக் கிறார்கள். தங்களது விருப்பத்தை சுபேதாவிடம் எடுத்து கூறி சம்மதம் வாங்கிவிட்டு, கதிஜாவுக்கு கைசு என்ற புதிய பெயர் வைத்து தங்களோடு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

கஜிதா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவருடைய மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்து அவர் பிரார்த்தனை செய்வதற்கு தனி அறை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கதிஜா திருமண பருவத்தை எட்டியதும் மாப்பிள்ளை தேட தொடங்கி இருக்கிறார்கள். அவளுடைய மத சம்பிரதாயப்படித்தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டும் என்று நிறைய இடங்களில் வரன் பார்த்திருக்கிறார்கள். இறுதியில் சவுதியை சேர்ந்த அக்பர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அவள் திருமணமாகி சென்ற பிறகு அவள் வளர்த்த பறவைகளை வேறொருவருக்கு வளர்க்க கொடுத்துவிட்டோம். அவள் சென்ற பிறகு வீடு வெறுமையாக இருக்கிறது. நாங்கள் மீண்டும் தனியாக வசிக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவளை பார்க்க செல்கிறோம்.

அவ்வப்போது அவளை வீட்டிற்கு கூட்டி வருவோம். இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் அதிகம் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறாள் என்கிறார் கதிஜாவின் தயார் செல்வமணி.

கதிஜா மீது மதனன் – தங்கமணி தம்பதியர் காட்டும் அன்பு, அக்கறைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. ஏராளமான பிர பலங்களும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இவர்கள் நடத்திய கருணை திருமணம் எல்லை கடந்து பாகிஸ்தானில் உள்ள பிரபலமான சேனல்களிலும் செய்தியாகி விட்டது.