காலையில் எழுந்ததும் என்ன குடிக்க வேண்டும் தெரியுமா? -ஆரோக்கிய பானங்கள்!

அநேகமாக எழுந்ததும் டீ, காபி, பால் இப்படித்தான் எல்லோருமே குடிக்கிறோம். ஆனால், காலையில் எழுந்ததும் முதலில் என்ன குடிக்கிறோமோ அதுதான் அன்றைய நாள் முழுவதும் உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் வயிற்றில் முதலில் குடிக்கும் பானம் தீங்கு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்றும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சரி, எழுந்ததும் முதலில் என்ன ஆரோக்கிய பானங்கள் குடிக்கலாம் என்று மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது … பார்ப்போம்.

தண்ணீர் தான் முதலில்…
எழுந்தவுடன் அரைமணி நேரத்திற்குள் சுத்தமான நீரை முக்கால் லிட்டர்  குடிக்க வேண்டும். வெந்நீர் வேண்டாம், ஆற வைத்து வேண்டுமானால் குடிக்கலாம். சாதாரண நீர் மட்டுமே அசிடிட்டியை குறைக்கும் ஆற்றல் அதிகம் கொண்டது. வெறும்வயிற்றில் நீர் குடித்தால் அமிலத்தின் வீரியத்தை சரிசெய்து, வயிற்றை பாதுகாக்கிறது. தினமும் எழுந்ததும் நீர் குடித்தால் ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய், அல்சர், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, உடல்பருமன் போன்றவை கட்டுப்படும்.

அடுத்து வெந்தயம் ஊற வைத்த நீர் குடிக்கலாம். இது சர்க்கரை நோய், உடல் சூட்டுக்கு நல்ல மருந்து. வெந்தயம் ஊற வைத்து மட்டுமே அந்த நீரை குடிக்க வேண்டும். வெந்தயத்தை போட்டுக்கொண்டு நீரைக் குடிப்பது பலன் தராது. அறுகம்புல் சாறும் எழுந்தவுடன் குடிக்கலாம். இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கும். இஞ்சிச் சாறு குடிக்கலாம். இது கொழுப்பைக் குறைத்து, நுரையீரல் நோய்களையும் விரட்டும். ஆனால், வயிற்றில் புண் போன்ற கோளாறு இருப்பவர்கள் இஞ்சிச் சாறை குடிக்கக் கூடாது. நெல்லிக்காய் சாறு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். நீராகாரம் கூட குடிக்கலாம். வெயில் காலங்களில் மிகவும் குளிர்ச்சி தரும் பானம் இது. சரி இன்று முதல் உங்களின் தேவைக்கு ஏற்ப ஆரோக்கிய பானங்களைப் பருகுவீர்கள் தானே?