சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும்.
சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய்,கரடி, ஓநாய், யானை எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றன. பல விலங்குக்கு அடுத்த வேலை உணவே இன்னொரு விலங்குதான்.
இங்கே சிங்கம் சைட் டிஷ்ஷுக்காக ஓடும், மான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும். ஒன்றிடமிருந்து இன்னொன்று தப்பிக்க எவ்வளவோ முறைகளை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் வழங்கியிருக்கிறது.
அவற்றில் முக்கியமான ஓர் உயிரினம் இருக்கிறது, இது வரை கேள்விப்பட்ட உயிரினங்களைப் போல இல்லை இது. அவ்வளவாக தன்னுடைய வளையை விட்டு வெளியே வராத உயிரினம், வெளி உலகுக்கு அவ்வளவாகத் தெரியாத உயிரினம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும். அதன் பெயர் தேன் வளைக்கரடி (HONEY BADGER )
யாரைக் கண்டும் பயப்படாத, உயிரைப்பற்றிக் கவலைப்படாத ஒரே விலங்கு தேன் வளைக்கரடி, எதிரில் இருப்பது மானாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும்.
அதன் இயல்பே எதிர்த்து நிற்பதுதான். பசித்தால் பக்கத்தில் இருப்பது நாகப் பாம்பாக இருந்தாலும் ஒரே கடியில் கடித்துக் கொன்று விட்டுத் தூங்கி விடும்.
30 நிமிடங்கள் கழித்து எழுந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தன்னுடைய குகைக்குள் சென்றுவிடும்.
உலகின் கொடிய விஷமுள்ள பாம்புகளான நாகப் பாம்பு, கறுப்பு மாம்பா என எந்தப் பாம்பாக இருந்தாலும் இதற்கு முன்பாக இரண்டு நிமிடங்கள்தாம்.
அந்த இரண்டு நிமிடத்தில் தப்பிக்க முடிந்தால் தப்பித்துக் கொள்ளலாம் இல்லையென்றால் டின்னரோ, பிரேக்ஃபாஸ்ட்டாகவோ மாறிவிடும்.
எவ்வளவு விஷத்தைக் கக்கினாலும் இரண்டாவது நிமிடத்தின் இறுதியில் சரியாகப் பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துவிடும். ஆராய்ச்சியாளர்கள் பலரும் எப்படி இது சாத்தியம் என இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கரடிக்கும் பாம்புக்குமான சண்டையில் பாம்பு கரடியைக் கொத்திவிடும். நான்கைந்து முறை கூட பாம்பு கரடியைக் கொத்தும், ஆனாலும் பாம்பின் விஷம் கரடியை எதுவும் செய்வதில்லை. அதன் தோல் கடினமாக இருப்பதால் பாம்பின் விஷம் உடலுக்குள் செல்வதில்லை என்று சொல்லப்படுகிறது.
தேன் என்றால் எத்தகைய சாகசத்தையும் இவ்வகை கரடிகள் நிகழ்த்தும். மர உச்சியிலோ, மலை உச்சியிலோ இருக்கிற தேன் கூடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கரடிகள் காலி செய்து விடுகின்றன.
தேன்கூடுகளைச் சேதப்படுத்தும் பொழுது கரடி தன்னுடைய காதுகளை மூடிக்கொள்ளும். அதன் தோல் அடர்த்தி காரணமாக தேனீக்களால் கரடியை விரட்ட முடியாமல் போய்விடுகிறது.
அதிக மோப்ப சக்தி கொண்ட தேன் வளைக்கரடிகள் எளிதாக எதையும் கண்டுபிடித்துவிடும். அதனாலேயே இவை தேன் வளைக்கரடிகள் என அழைக்கப்படுகின்றன.
“Honey Guide” என்றொரு பறவை இனம் உண்டு. தேன்கூடுகள் எங்கிருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதாலேயே இந்தப் பறவைக்கு இந்தப் பெயர்.
(விலங்குகள் என்று இல்லை சில நேரங்களில் மனிதர்களுக்கும் தேன் இருக்குமிடத்தை அடையாளம் காட்டும் என்கிறார்கள்) விலங்குகள் வந்து தேன்கூடுகளை உடைத்துச் சாப்பிட்டுச் சென்றபின் மீதமிருக்கும் தேனையும், கூடுகளிலிருக்கும் சிறு புழு,பூச்சிகளையும் உணவாக உட்கொள்வதற்காகவே இந்தப் பணியை அவை செய்வதாக நம்பப்படுகிறது.
இந்தப் பறவைகளின் நண்பனாகத் தேன் வளைக்கரடிகள் இருக்கின்றன. அறிவியல் பூர்வமாக இந்தச் செயல் நிரூபிக்கப்படவில்லை ஆனாலும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
எத்தனை பலம் பொருந்திய விலங்காக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் பண்பே தேன் வளைக்கரடிகளின் தனிச் சிறப்பு.
சிங்கமாகவே இருந்தாலும் தனி ஓர் ஆளாக எதிர்த்து நின்று துரத்திவிடும் அளவுக்கு தில்லானது தேன் வளைக்கரடி.
சிங்கங்கள் தேன் வளைக்கரடிகளை அவ்வளவாக வேட்டையாடுவதில்லை, சில நேரங்களில் சிங்கங்கள் தேன் வளைக்கரடிகளைப் பார்த்து விலகிச் சென்று விடுகின்றன.
கரடியை வேட்டையாடுவதை விட அவற்றை உணவாக எடுத்துக்கொள்வதில் அதிக சிரமம் சிங்கங்களுக்கு ஏற்படுகிறது. கரடிகள் தோல் மிக அடர்த்தியாகவும், கனமாகவும் இருப்பதால் அதன் உடலைக் கிழிப்பதில் சிங்கங்கள் சிக்கலை எதிர் கொள்கின்றன.
“ஏண்டா இவனைக் கொன்றோம்” என்கிற அளவுக்குக் கரடிகள் சிங்கங்களுக்குச் சோதனையைக் கொடுத்துவிடுகின்றன. மரம் ஏறுவதில் சிறுத்தைக்கு அடுத்த இடத்தில் தேன் வளைக்கரடிகள் இருக்கின்றன.
சிறுத்தைகள் பொதுவாக வேட்டையாடிய உணவை மரத்தில் வைத்து உண்ணும் பழக்கம் கொண்டது. வேட்டையாடிய விலங்குகளைச் சிறுத்தை மரத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
சிறுத்தை இல்லாத நேரத்தில் மரத்தில் இருக்கிற உணவைத் தேன் வளைக்கரடிகள் உணவாக்கிக் கொள்கின்றன. மரத்தில் இருக்கும் சிறுத்தையின் குட்டிகளையும் தூக்கிச் சென்றுவிடுகின்றன.
தேன்வளைக்கரடிகள் மண்ணுக்குள் குகை தோண்டி அதற்குள் வாழ்கிற உயிரினம். ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா, இந்திய உபகண்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கீரி வகையைச் சேர்ந்த சிற்றினம்.
மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. அதிகபட்சமாக 24 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.
இதன் இனப்பெருக்க காலம் ஆறு மாதங்கள். ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகள் ஈனும். தேன் வளைக்கரடிகளின் குட்டிகள் சர்வைவல் பற்றி கற்றுக் கொள்ள தாயுடன் பயணிக்கின்றன.
தேன் வளைக்கரடிகள் தங்களின் குட்டிகளை இரண்டு வருடங்கள் வரை உடனிருந்து வளர்க்கும். எப்படி எதிரிகளை எதிர்கொள்வது, அவற்றிடமிருந்து எப்படித் தப்பிப்பது எனச் சகலத்தையும் கற்றுக் கொடுத்தபிறகே குட்டிகளைத் தனியாகச் செல்ல விடும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் இவ்விலங்கு மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுகாவின் தொட்டாலஹல்லி என்ற கிராமத்தில் கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு, மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சில நாள்களிலேயே இறந்துவிட்டது.
2014 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் புகைப்பட ஆதாரத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு தேன் வளைக்கரடிகள் இந்தியாவில் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் 7 ம் தேதி இரவு ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள ஸ்ரீ லங்கமல்லேஸ்வரா உயிரியல் சரணாலயத்தில் உள்ள கேமராவில் ஒரு தேன் வளைக்கரடி பதிவாகியுள்ளது.
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டெனில் அதன் பெயர் HONEY BADGER..