2016ல் நடைபெற்ற அமெரிக்க தேர்தல் சமயத்தில் தவறான செய்திகளை ரஷ்யா பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தவறான செய்திகளுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியுள்ளது என கருதப்படுகிறது.
உண்மைக்கு மாறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை ரஷ்யா கொண்டுவந்துள்ளது.
இந்த சட்டம் விரைவில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், ஒரு லட்சம் பேருக்கு மேலான வாசகர்களை கொண்ட வலைத்தளங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பதிந்தால் அவற்றை உடனடியாக நீக்கம் செய்யுமாறு கோரலாம்.
உண்மைக்கு மாறான தகவல் பதியப்பட்டுள்ளதாக ஒருவர் கூறும்பட்சத்தில், 24 மணிநேரத்திற்குள் அந்த செய்தியினை நீக்க வேண்டும், தவறும் பட்சத்தில் 50 மில்லியன் ரூபிள் ($793,000) அபராதமாக செலுத்த நேரிடும்.
தவறான செய்திகளை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை ரஷ்யாவைத் தவிர வேறு சில நாடுகளும் விதித்துள்ளன. உகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தனியாக வரியே செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
மலேசியா அரசும் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவதை தடுக்க கடுமையான சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி எகிப்திய மக்களவையிலும் இதுபோன்ற ஒரு சட்டத்தை அமுல்படுத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
எனினும் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் என்று ரஷ்ய அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
ரஷ்ய அரசின் புதிய சட்டம் காரணமாக சமூக வலைத்தளங்களில் ஜாம்பவன்களான பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் அந்நாட்டில் தனியாக அலுவலகங்களை தொடங்கி ரஷ்ய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டம் அந்நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.