இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார செயற்பட்டு ரீதியான அரசியலில் ஈடுபட்டால், அவருக்கு முடிந்தளவு கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குமார் சங்ககார அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி பேசவில்லை எனவும் ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி பேசியுள்ளதா என்பது பற்றி தனக்கு தெரியாது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, சமிந்த வாஸ், திலக்கரட்ன தில்ஷான் ஆகியோர் பிரதான கட்சிகள் ஊடாக அரசியலுக்கு வரவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.