இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டிற்கு உள்ளான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி பாராளுமன்ற அமர்வுகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணையை வலுவற்றுப் போகச் செய்வதற்காக செயற்பட்டார் என பெய்ஸ்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டாமென முன்னாள் பிரதமர் டேவிட் கமரனுக்கு இயன் பெய்ஸ்லி கடிதம் அனுப்பியிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இவ்விடயம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் 30 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற நிலையியற்குழு பரிந்துரைத்திருந்தது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றதில் பெய்ஸ்லிக்கான தடை உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் படி செப்டெம்பர் மாதத்தில் வரும் முதல் 30 நாட்களுக்கு பெய்ஸ்லிக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெய்ஸ்லி பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு அண்ரீமி பகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.