திமுக தலைவர் கருணாநிதியை இந்திய நேரப்படி சுமார் 1.30 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சென்னை காவேரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கொண்டு சென்றுள்ளனர்.
இரவு 10 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோர், திடீரென்று சுமார் 12 மணியளவில் மீண்டும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து திமுக முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமான நிலையில் உள்ளதால் அவரை மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து அவரது வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனையடுத்து கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவரும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்தது.
தற்போது கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திமுக தலைவர் கருணாநிதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது இறுகிய முகத்துடன் நின்ற ஸ்டாலின் கண்ணீர் சிந்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனை விரைந்துள்ளனர்.