தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய, இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தார்கள் என்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஐந்து பேரைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இவர்கள் ஆரம்பத்தில் சாதாரண சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், பல்வேறு காரணங்களுக்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வழக்கு நடத்தப்பட்டால் அச்சுறுத்தல் காரணமாக சில சாட்சிகள், சாட்சியமளிக்க மறுப்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கோரியிருந்தேன்.
ஆனால், சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த வழக்கை கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
எனவே, இது எனது கைகளுக்கு அப்பாற்பட்ட விடயம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
காராளசிங்கம் குலேந்திரன், குணசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார், லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியோர் மீதே நாளை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.