நான் நூற்றாண்டை கடந்து வாழ விரும்புகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி விழா ஒன்றில் பேசிய பேச்சு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த பொது நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் அருகே அமர வைக்கப்பட்டுள்ளார். கூட்டத்தில் கமல்ஹாசன் உட்பட பல்வேறு நடிகர்களும் பிரமுகர்களும் அமர்ந்துள்ளனர். அதில் தான் கருணாநிதி தீர்க்கமான குரலில் பேசுகிறார்.
அவர் பேசுகையில், நான் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். சில நேரங்களில் சலிப்பில், என்ன வாழ்க்கை இது என்று சொன்னாலும் கூட, சில நேரங்களில் எனக்கு இளையவர்கள், கழகத்தின் முன்னோடிகளாகன தொண்டர்கள், மரணமடையும்போது, நாம் இருந்து இதையெல்லாம் காணவேண்டியிருக்கிறதே என்று கவலைப் பட்டாலும் கூட, நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் வாழ வேண்டும் என்று விரும்ப காரணம் தமிழை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக, தமிழர்களே இன்னும் நலமாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காக தான்.
புராணங்களில் நம்புவது போல என்னுடைய உயிரை எமன் பறித்துவிட முடியாது.
நீங்கள் விரும்புவது போல நூற்றாண்டுக்கு மேல் இருப்பேன். அதற்கும் முன்பாக கொடுக்க வேண்டுமென்றால், தமிழருக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் இலக்கியத்திற்காக தான் கொடுப்பேன் என பேசியுள்ளார்.