எம்மிடமுள்ள ஆயுதங்களை மீளப்பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சேருவேன். அதனைவிட எமக்கு வேறு மார்க்கமில்லை என்று புௌாட் அமைப்பின் தலை வர் சித்தார்த்தன் என்னிடம் தெரிவித்திருந்தார்.
ஆயுதங் கள் களையப்பட்டதையடுத்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார்.
தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய அவர் வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து நீதியான தேர்தலுக்கு நடவடிக்கை எடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண சபை தேர்தலில் நாம் தோல்வியடைவோம் என்பதை தெரிந்துகொண்டே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்தத் தேர்தலை நடத்தினார்.
தேர்தல் நீதியாக நடைபெற வேண்டும் என்பதால் தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு ஜனாதிபதி என்னிடம் கூறினார்.
இதற்கிணங்க ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து நான் பேசினேன். இந்தத் தேர்தலில் நாம் தோற்றால் கூட்டமைப்பின் கை ஓங்கிவிடும்.
அத்துடன் உங்களது சகோதரரும் தோல்வியைத் தழுவ நேரிடும். எம்மால் அரசியல் செய்ய முடியாது போய்விடும் என்று அவர் என்னிடம் கூறினார்.
ஆனாலும் உங்களது பாகாப்புக்குத்தானே ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள். அந்தப் பாதுகாப்பை நாம் தருகின்றோம் என்று நான் கூறியிருந்தேன்.
இதேபோன்றே பு .ௌாட் தலைவர் சித்தார்தனையும் அழைத்து நான் பேசினேன். எம்மிடமிருந்து ஆயுதங்களைக் களைந்தால் எமக்கு வேறுமார்க்கமில்லை. நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டிவரும்.
இந்தத் தேர்தலில் உங்களது சகோதரரும் தோற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனாலும் ஆயுதங்கள் களையப்பட்ட பின்னர் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.
வடமாகாண சபைத் தேர்தலில் நாம் தோல்வி அடைவோம் என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார்.
ஆனாலும் தமிழ்க் கூட்டமைப்புக்கு இந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதன் மூலம் அவர்களது ஒத்துழைப்பை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று ஜனாதிபதி கருதியிருந்தார்.
ஆனால் கூட்டமைப்பானது அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஒரு கலந்துரையாடலுக்கு கூட அவர்கள் வரவில்லை என்று தெரிவித்தார்.