அதன் பற்கள் மனிதப் பற்களைப் போலவே இருக்கும். அதைப்போன்ற மீன்வகையை யாரேனும் பிடித்தால் நீர்நிலைகளில் திருப்பிவிடாமல் எங்களிடம் ஒப்படைக்கவும். அது ஒரு ஆக்கிரமிப்பு உயிரினம். அது அமெரிக்காவைச் சேர்ந்தது அல்ல.
அவள் பெயர் கென்னடி ஸ்மித். வயது 11. தனது தாத்தா பாட்டியோடு கோப் ஏரிக்குச் சென்றிருந்தாள். அங்குதான் அவள் வார இறுதி நாட்களை அவர்களோடு ஆனந்தமாகக் கழிப்பாள்.
அன்றும் அவள் அப்படியொரு நாளாக நினைத்தே அங்கு சென்றாள். சென்று வழக்கம்போல் தனது தாத்தா தயார்செய்து கொடுத்த தூண்டிலை எடுத்துக்கொண்டு ஏரிக்கரைக்குச் சென்று அமர்ந்து தூண்டிலை வீசினாள்.நீண்டநேரம்…
ஒரு மீன்கூட சிக்கவில்லை. உதவி வேண்டுமாவென்று கேட்ட தாத்தாவிடம்கூட பதில் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். சரி இன்னும் சிறிதுநேரம் பொறுத்துப் பார்ப்போமென்று நினைத்தாலோ என்னவோ! அதற்குப் பலனும் கிடைத்துவிட்டது.
தூண்டிலில் ஏதோ மாட்டிவிட்டது. நல்ல கனமான மீனாகத்தான் மாட்டியிருக்கிறது. தூண்டிலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். விட்டுவிடக் கூடாதல்லவா!
தூண்டிலை வெளியே இழுத்தாள். கொஞ்சம் சிரமப்பட்டுத்தான். ஒரு அடிக்குக் குறையாத நீளமும், அரை அடி அகலமுமிருந்த அந்த மீனை இழுக்கப் பதினொரு வயதுப் பிள்ளைக்குச் சிறிது சிரமமாகத்தானே இருக்கும்.
இருந்தாலும் எடுத்துவிட்டாள். ஆனால், அந்த மீனில் ஒரு வித்தியாசத்தைக் கவனித்த கென்னடி உடனடியாக அதைத் தன் தாத்தாவிடம் கொண்டு சென்றாள்.
அந்த மீனை வாங்கிப் பார்த்த கென்னடியின் தாத்தா ஓக்லஹோமா கேம் வார்டன்ஸ் (Oklahoma game wardens) அழைத்து விவரத்தைச் சொன்னார். அதிகாரிகள் விரைந்தனர்.
கென்னடியை அவள் தன் சுய முயற்சியால் பிடித்த அந்த மீனோடு அவளை ஒளிப்படம் எடுத்தார்கள். அதைப் பிடித்ததற்காக அவளைப் பாராட்டிவிட்டு மீனை வாங்கிக்கொண்டு விடைபெற்றுவிட்டார்கள்.
தான் ஆசையாகப் பிடித்த மீனை இழந்துவிட்ட வருத்தம்தான் கென்னடிக்கு. அவர்கள் போன சில மணிநேரங்களிலேயே அந்த அமைப்பின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் கணக்கில் ஒரு பதிவும் அதிலிருந்த சிறு பெண்ணும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்தச் சிறுமிதான் கென்னடி ஸ்மித். அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அந்தச் சந்தோஷம் அடங்குவதற்குள் உலகம் முழுவதுமான செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் அதிசயமான மீனோடு நிற்கும் கென்னடியின் அந்தப் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அன்று அந்த மீனைப் பிடிக்கும்போதோ, அதை வைத்துக்கொண்டு ஒளிப்படத்திற்குப் போஸ் கொடுக்கும்போதோ அவள் நிச்சயம் நினைத்திருக்கவே மாட்டாள். கென்னடியை அப்படிப் பிரபலமாக்கியது எந்த மீன்?
ஓக்லஹோமா கேம் வார்டன்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவின் சுருக்கம்,
“ஜூலை 22-ம் தேதியில் காலை 9 மணியளவில் எங்களுக்குத் தகவல் வந்தது. கென்னடி ஸ்மித் என்ற சிறுமி பக்கூ (Pacu) என்ற ஒருவகை மீனைப் பிடித்துள்ளார்.
அதன் பற்கள் மனிதப் பற்களைப் போலவே இருக்கும். அதைப்போன்ற மீன்வகையை யாரேனும் பிடித்தால் நீர்நிலைகளில் திருப்பிவிடாமல் எங்களிடம் ஒப்படைக்கவும்.
அது ஒரு ஆக்கிரமிப்பு உயிரினம். அது அமெரிக்காவைச் சேர்ந்தது அல்ல.” இந்தப் பக்கூ என்ற வகை மீன் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தது? ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறியது?
பொதுவாக அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் மீதான ஈர்ப்பு அதிகம். அவர்கள் பல்வேறு வகையான உயிரினங்களைத் தங்கள் வளர்ப்பு உயிரினமாக வளர்க்கும் பழக்கம் கொண்டவர்கள். மீன்களிலும் அப்படித்தான்.
பிரானா என்ற வேட்டையாடி மீன் வகையின் குடும்பத்தைச் சேர்ந்தது பக்கூ. ஆனால், பிரானாவைப் போலவே வேட்டையாடியில்லை. தாவரங்களையும், பழங்கள், கடலை வகைகளையுமே அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் கொண்டவை.
அழுகிய தாவரங்கள், முற்றிப்போய் மரத்திலிருந்து விழும் பழங்கள், கடலைகளை நன்றாகக் கொரித்துத் தின்பதற்காகவே அவை மனிதர்களைப் போன்ற பல் அமைப்பப் பெற்றுள்ளன.
பொதுவாக பக்கூ மீன்களைப் பற்றிய ஒரு வதந்தி உண்டு. அமேசான் காடுகளுக்குள் மரங்களிலிருந்து நீர்நிலைகளில் விழும் பழங்களைச் சாப்பிட்டுப் பழகியதால், ஆண்கள் யாரேனும் நீந்திச் செல்லும்போது அவர்களின் விதைப் பைகளைப் பழங்கள், கடலைப் பொருட்களென்று எண்ணிக் கடித்துவிடும் என்பதே அந்த வதந்தி. ஆனால், அது உண்மையில்லை.
இந்த விஷயம் அந்த மீன்களைப் பற்றிப் பரப்பப்பட்ட வதந்தியே என்கின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இதுவரை யாரும் பக்கூ மீன்களால் அந்த மாதிரியான பாதிப்புகளை அனுபவித்ததாகப் பதிவாகவில்லை.
அமேசான் காடுகளில் வாழும் பக்கூ மீன்களைப் பிடித்து அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கி வளர்ப்பவர்கள் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதில்லை. விற்பவர்களும் எதையும் சொல்வதில்லை.
சராசரியாக முழு வளர்ச்சியடைந்த ஒரு பக்கூ மீனின் அளவு குறைந்தபட்சம் 1.2 மீட்டரும் 40 கிலோ எடையும் கொண்டிருக்கும். இந்த அளவிற்கு அவை வளரும்போது அவற்றை வீட்டிலிருக்கும் சாதாரண வளர்ப்புத் தொட்டிகளுக்குள் வைத்துப் பராமரிக்கமுடியாது.
அதனால், வளர்ப்பவர்கள் பக்கூ மீன்களை ஆற்றிலோ ஏரியிலோ விட்டுவிடுகிறார்கள்.
பொதுவாக அனைத்துண்ணிகளாக (Omnivores) இருப்பதால் அங்கு வாழப்பழகிக்கொண்டு அங்கிருக்கும் மற்ற பக்கூ மீன்களோடு இனப்பெருக்கம் செய்து தங்களுக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்கின்றன.
அவற்றின் விரைவான அபரிமிதமான வளர்ச்சி அதே பகுதியிலிருக்கும் மற்ற மீன்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடுகிறது. அதனால்தான், பக்கூ மீன்களை யாரேனும் கண்டால் அதைப் பிடித்துத் தனியாகப் பராமரித்துவிட்டு அந்த அமைப்புக்குத் தெரிவித்தால் அவர்கள் வந்து கொண்டுசென்று பாதுகாத்து அதை மீண்டும் அமேசான நதியிலேயே விட்டுவிடுவார்கள்.
எந்தவொரு உயிரினமும் இருக்கவேண்டிய இடத்திலிருக்காமல் வேற்று நிலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினால் இறுதியில் அந்நிலப்பகுதியைச் சேர்ந்த உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கி விடுமென்பதைச் சந்தேகமின்றி நிரூபித்துள்ளது இந்த மனிதப் பற்களைக் கொன்ட பக்கூ.