மது போதையில் சினையாட்டை சீரழித்த மனித மிருகங்கள்!

இந்தியாவின் ஹரியானா மாநிலப் பகுதியில் ஆடு ஒன்றை பாலியல் துஸ்பிரயோகப்படுத்தியதாக ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள மேவட் பகுதியில் அஸ்லு என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவரது ஆடு சினையாக இருந்துள்ளது.

இந்நிலையில் தனது ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அஸ்லு,  பொலிஸ் நிலையத்தில்  புகார் தெரிவித்தார்.

கடந்த 25 ஆம் திகதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆடு இறந்ததற்கான காரணம் வைத்திய பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும் என்றனர்.

இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு தெரிவிக்கும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். பொலிஸில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய். நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.”

இது தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ள பீட்டா அமைப்பின் நிர்வாகி மீட் அஷர் , விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.  விலங்குகள் மீது இது போன்ற செயலை செய்பவர்கள் பின்னர் மனிதர்கள் மீதும் நடத்துவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.