மன்னாரில் பெற்றோருடன் ஆலயத்திற்கு சென்ற இரண்டு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் விரைந்து செயற்பட்டதால் இறுதியில் தமது மகன் கிடைத்து விட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.குறித்த கடத்தல் சம்பவம் மன்னார் முருங்கன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் சிறுவன் கடத்தப்பட்டு 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆலய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;சிறுவன், பெற்றோருடன் நேற்று பிற்பகல் ஆலயத்திற்கு சென்றுள்ளான். சிறிது நேரத்தின் பின் சிறுவனை காணாது பெற்றோர் தேடியுள்ளனர்.
எனினும் சிறுவன் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டின் அடிப்படையில் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆலயத்துக்கு வந்த திருக்கோவில் பகுதியை சேர்ந்த கிருஸ்ணமூத்தி நிசாந்தன் என்பவர் பூஜைகள் முடியும் முன்னரே அங்கிருந்து வெளியேறியதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன்; வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.திருக்கோவிலை சேர்ந்த சந்தேகநபரின் வீட்டைப் பொலிஸார் இனம்கண்டு அங்கு சோதனை நடத்திய போது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கி செல்லும் பேருந்தில் சந்தேகநபர் சிறுவனுடன் ஏறியதை வவுனியா பொலிஸார் அவதானித்து நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.பொலிஸாரின் துரித செயற்பாடு காரணமாக மாலை 5 மணியளவில் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுவனை சந்தேகநபர் கடத்தியமைக்கான காரணம் தெரியவரவில்லை என கூறப்படுகிறது.அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிக்கு விடுத்த முக்கிய கோரிக்கைக்கு அமைய கடத்தப்பட்ட குழந்தையை துரிதமாக பொலிஸார் மீட்டுள்ளதாக குறித்த சிறுவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.