அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கிரீஸ் பூதம் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.யாழ். குடாநாட்டில் நிலவும் அமானுஷ சக்திகளுக்கு அப்பால், நபர் ஒருவர் பல இடங்களில் மக்களை அச்சுறுத்துவதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கிரீஸ் பூதம் வந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்கு முன்னர் வடபகுதியில் பாரிய யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கிரீஸ் பூதங்கள் வந்துள்ளன. இந்த அச்சம் காரணமாக பெருமளவு மக்கள் தங்களை வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி இருந்தனர்.
இராணுவத்தினரே இவ்வாறு பூதங்களாக மாறி மக்களை அச்சுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்து. அவ்வாறு அச்சுறுத்துவோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மீண்டும் கிரீஸ் பூதங்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கிரீஸ் பூதத்தை எப்படியாவது பிடித்து தருமாறு மக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.காலத்திற்கு காலம் மக்களை அச்சுறுத்தும் அமானுஷ சக்திகள் உண்மையில் செயற்படுகின்றனவா? அல்லது ஒரு சிலரின் தேவைக்காக இவ்வாறான பதற்ற நிலை ஏற்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருசில குழுக்கள் தங்கள் சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இவ்வாறு மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துவதாக பலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.