பருப்பு வடை ரெசிபி செய்வது எப்படி
மாலையில் வடை சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது உடனே கடைக்கு சென்று வாங்கி வந்து சாப்பிடாமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அவ்வளவு பணம் செலவழித்து கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால், எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா.
மேலும் வடை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. இப்போது வடையில் பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்…
பருப்பு வடை ரெசிபி
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 3/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
வரமிளகாய் – 3
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
1 மணிநேரம் ஆன பின்னர், அதனை நன்கு கழுவி, அதில் 1/4 கப் பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மீதமுள்ள பருப்பை நன்கு அரைத்து, அத்துடன் வரமிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஓரளவு அரைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் வெங்காயத்தை போட்டு கிளறி, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி, தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.