தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த கணினி பொறியாளர் தினேஷ்குமார். இவர் தனது அக்கா முறை உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளார்.
அப்போது, குறித்த பெண் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய ஸ்மார்ட்போனில், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தர வேண்டி தினேஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.
அதன்படி, அவரது ஸ்மார்ட்போனை வாங்கிய தினேஷ்குமார், அதில் Track View என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதனை தனது கைப்பேசி மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வழிவகை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த பெண் தனது கணவருடன் பேசும் அந்தரங்க விடயங்கள், அந்தரங்க வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் தினேஷ்குமார் தனது மடிக்கணினியில் Track View செயலி மூலம் பதிவு செய்துள்ளார்.
பின்னர், அவற்றை வைத்து குறித்த பெண்ணை மிரட்டி, தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார். அப்பெண் இந்த விடயத்தை தனது சகோதரரிடம் தெரிவிக்க, அவர் குறுந்தகவல் ஒன்றை தனது சகோதரி அனுப்புவது போல் தினேஷ்குமாருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் தனிமையில் சந்திக்கலாம் என இடம் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு சென்ற தினேஷ்குமாரைப் பார்த்த குறித்த பெண்ணின் சகோதரரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தினேஷ்குமாரை அடித்து உதைத்த அவர்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தினேஷ்குமாரை கைது செய்த பொலிஸார், அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில் 2 மடிக்கணினிகள், 3 கைப்பேசிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெண்களின் உடைகளை கைப்பற்றினர்.
அதில் ஒரு மடிக்கணினியில் 80க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்களும், 140க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க உரையாடல்கள் இருந்துள்ளன.
பின்னர், இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
தினேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், தனியார் கல்லூரி ஒன்றில் கணினி தொழில்நுட்பவியளாலராக பணிபுரிந்த போது, மாணவி ஒருவரின் கைப்பேசியில் இருந்து வீடியோக்களை திருடியுள்ளார்.
அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில் தினேஷ்குமார் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர், தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட்போன்களையும் வாங்கி பார்ப்பது போல் Track View செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.
அதனை தனது கைப்பேசி மற்றும் மடிக்கணினியுடன் இணைத்துள்ளார். இதன்மூலம் அவருக்கு கிடைக்கும் அந்தரங்க வீடியோக்களைக் கொண்டு, அந்த பெண்களை மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவர்களது உடைகளை மட்டும் தனது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார்.
அவரது ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களின் வீடியோக்களை ஒன்லைன் மூலமாக, வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
இவ்வாறு தினேஷ்குமாரிடம் சிக்கியவர்கள் பெரும்பாலானோர் அவரது உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தினேஷ்குமார் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தினேஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.