அரச பேருந்து ஒன்றில் யாழ்ப்பாணம் என்ற பெயர் பிழையாக எழுதப்பட்ட விவகாரம் தற்பொழுது அனைவரதும் விசனத்திற்கு உள்ளாகியுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றிலேயே இது எழுதப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழர்கள் இந்த பேருந்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஸ்ரீ லங்கா அரசாங்கத்தை மிக மோசமாக விமர்சித்துவர்கின்றனர்.மொழிகளுக்கென்று தனியாக இயங்கும் ‘தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லையா என பலரும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக இலங்கையைப் பொறுத்தவரை இதுபோன்ற அரசாங்க சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களில் தமிழ் மொழி திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாகவும் அதற்கு தமிழ் பிரதிநிதிகளும் துணைபோவதாகவும் சிலர் காட்டமாக விமர்சித்துள்ளனர்
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் தேசிய தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு நாம் தொடர்பினை ஏற்படுத்த முனைந்தபோதும் பலனளிக்கவில்லை.
அண்மையில் மொழி உரிமை குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கென மேற்படி அமைச்சு விசேட இலக்கங்களை மக்களிடம் கொடுத்திருந்தது. +94714854734 மற்றும் 1956 ஆகிய இலக்கங்களினூடாக முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடியும் என கூறியிருந்தது.
ஆனாலும், குறித்த இலக்கங்களுக்கும் அமைச்சின் இலக்கங்களுக்கும் நாம் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தபோதும், பதில் கிடைக்கவில்லை என்பதுடன் அமைச்சின் உத்தியோகபூர்வ இலக்கத்திற்கு அழைப்பினை எடுத்தபோது தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாத ஒருவர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.