திண்டுக்கல் பிரியாணி

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி – 1 கிலோ

சிக்கன் – 1 கிலோ

இஞ்சி, பூண்டு விழுது – 4 கரண்டி

பட்டை – 10 கிராம்

கிராம்பு – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

பிரிஞ்சி இலை – 10 கிராம்

ஜாதிபத்திரி – 10 கிராம்

பச்சை மிளகாய் – 10

காய்ந்த மிளகாய் (வற்றல்) – 10

தக்காளி – 2 பெரியது

பெரிய வெங்காயம் – 2 பெரியது

சின்ன வெங்காயம் – 25 கிராம்

புதினா – 2 கப்

கொத்தமல்லி – 2 கப்

முந்திரி – தேவையான அளவு

எண்ணெய் – 100 மி.லி.

நெய் – 100 மி.லி.

தயிர் – 1 கப்

 

dindigul biryani in tamil,dindigul biryani samayal kurrippu tamil font

செய்முறை

அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி ஆகியவற்றை அரைத்து பொடியாக்க வேண்டும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனியாகவும், கொத்தமல்லி மற்றும் புதினாவை தலா ஒரு கப்புகள் எடுத்து சேர்த்து தனித்தனியாக அரைத்து விழுதாக தயாரிக்க வேண்டும். அதேபோல் சின்ன வெங்காயத்தை விழுதாக அரைத்து, தக்காளி, பெரிய வெங்காயத்தை தனித்தனியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய்யை ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பொன்னிறமாக மாறும்வரை கிளறி, பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி பொடி, பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு கிளற வேண்டும். அதையடுத்து சின்ன வெங்காய விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய் விழுது, கொத்தமல்லி, புதினா விழுது என்று ஒவ்வொன்றாக வரிசையாக போட்டு நன்கு கிளற வேண்டும்.

பின்னர் கழுவி சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் போட்டு கிளறிவிட வேண்டும். அப்போது அடுப்பில் தீ நன்றாக எரிய வேண்டும். இறைச்சியில் மசாலா சேர்ந்ததும் தேவையான அளவு தயிர், கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீரை ஊற்ற வேண்டும். (அரிசி 5 கப்என்றால் தண்ணீர் 8 கப் இருக்க வேண்டும்) நன்றாக கொதிக்க விட வேண்டும். தண்ணீர் குமிழ்விட்டு கொதித்ததும் அரிசியை அதில் போட்டு மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றத் தொடங்கியதும் குக்கர் மூடியை மூடிவிட வேண்டும். மூடியில் குண்டு (விசில்) போடக்கூடாது. 5 நிமிடங்கள் கழித்து குக்கர் மூடியை திறந்து நெய்விட்டு கிளறி மூடி, குண்டு போட வேண்டும். 5 நிமிடங்கள் தீயை மிகவும் குறைத்து வைத்து அணைத்து விடவும். மீண்டும் 5 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்கும் போது மணக்கும் திண்டுக்கல் சிக்கன் பிரியாணி தயாராக இருக்கும்.