முதலமைச்சர் வழியில் எதிர்க்கட்சி தலைவர் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதில்….
கேள்வி: பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கு வன்முறையை இரண்டு மாதங்களில் அடக்கிக் காட்டுவேன் என முதலமைச்சர் மத்திய அரசிற்குச் சவால் விட்டிருக்கின்றாரே இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?
பதில்: ’கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ என்றொரு பழமொழி உண்டு.
கடந்த நான்கு வருடங்கள் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகளை வினைத்திறனற்றதாகவும் அதன் உச்சக்கட்டமாக இன்று அதன் அமைச்சரவையின் செயற்பாடுகளைக் கூட நிறுத்தி வைக்கும் அளவிற்கு மிகவும் கெட்டித்தனமாக செயற்பட்ட முதலமைச்சர் நிச்சயமாக வன்முறையை அடக்கும் விடயத்திலும் அவ்வாறுதான் செயற்படுவார்.
2016 இறுதிப்பகுதியில் அரச அதிபரினால் முச்சக்கரவண்டிகளிற்கு தூரக்கணிப்பான் பொருத்தப்படல் வேண்டும் என்ற ஒழுங்கு விதி முறையினைக் கொண்டு வரவிருந்த வேளையிலே போக்குவரத்து தொடர்பான விடயங்கள் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் உட்பட்ட விடயமாதலினால் அவ் விடயப்பரப்பு தொடர்பான விடயங்களில் அரச அhதிபரைத் தடையிட வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டதன் நிமிர்த்தம் அரச அதிபர் அம் முயற்சியினைக் கைவிட்டார்.
கொழும்பில் ரூ.50.00இற்குச் செல்ல வேண்டிய தூரத்திற்கு யாழில் முச்சக்கர வண்டியில் செல்வதானால் ரூ.250.00 வரை செலுத்த வேண்டியுள்ளது.
ஓர் வர்த்தமானிப் பிரசுரத்தின் மூலம் ஓர் இரவில் செய்யக் கூடிய இவ் வேலையை இரண்டு வருடங்களாகச் செய்யத் தெரியாமலிருக்கும் முதலமைச்சர் இரு மாதங்களில் வன்முறையை அடக்குவார் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபையின் முழுமையான அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களிலொன்று கூட்டுறவுத் துறை.
கூட்டுறவுத் துறைக்கு வேண்டிய நியதிச் சட்டத்தினை ஆக்கி இன்று தூர்ந்து போயிருக்கும் கூட்டுறவுத் துறையை ஒழுங்குபடுத்தித் திறமையான நிர்வாகச் செயற்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும்.
இருக்கின்ற அதிகாரங்களினை சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?
முதலமைச்சரின் கடந்த காலச் செயற்பாட்டின்மையின் விளைவாக மாகாண சபை இன்று ஓர் கேலிக்கூத்தாகப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.
மாகாண சபைக் காலப்பகுதியில் முதலமைச்சரினால் எமது அதிகார வரம்பிற்குள் செயற்படுத்தக் கூடிய ஆனால் செயற்படுத்தத் தவறிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போனால் ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு இடமில்லாமல் போய்விடும்.
அதற்கு மேலாக எமது பிரதேசத்திற்கு வரவவிருந்த எவ்வளவோ அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் அசமந்தப் போக்கினால் எம்மை விட்டுச் சென்று விட்டது. அதனால்தான் அவரை நான் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தேன்.
அரசிற்குச் சவால் விட்டிருக்கும் முதலமைச்சர் முதலில் நான் விட்ட சவாலை ஏற்று பகிரங்க விவாதத்திற்கு வந்து கடந்த காலங்களில் மாகாண சபையினை வினைத்திறனாகச் செயற்பட வைத்தார் என நிரூபித்துக் காட்டி விட்டு பொலிஸ் அதிகாரத்தைக் கோரட்டும்.
கேள்வி: அண்மைய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் படி டெனிஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருக்கின்றார் என்றும் அரசியலமைப்பிற்கு அமைவாக மாகாண சபையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் இது தொடர்பாக முதலமைச்சரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் இதுவரை முதலமைச்சர் அதற்குப் பதிலிறுக்கவில்லை என்றும் கூறுகின்றார். அதே வேளை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமையத் தனக்குப் பதவி நீக்கும் அதிகாரம் இல்லை என்றும் அது ஆளுநரையே சாரும் என்றும் ஆதலினால் அது தொடர்பான நடவடிக்கையினை ஆளுநரே எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கூறியிருக்கின்றார். இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?
பதில்: தங்கள் கேள்வியில் கூறப்பட்டுள்ள முதலமைச்சரின் கூற்றினைப் பார்க்கும் போது ஏதோ ஒரு படத்தில் வரும் ‘வாழைப் பழக்’ கதைதான் எனக்கு நினைவிற்கு வருகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவுகளில் கூறப்பட்டுள்ள விடயங்களாவன:
அ) டெனிஸ்வரன் அவர்கள் தொடர்ந்து அமைச்சராக (முன்பு வகித்த அமைச்சுப் பொறுப்புகள்) செயற்படுவதற்குப் பிரதி வாதிகள் (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) தலையீடு செய்வதற்கு அல்லது தடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆ) முதலமைச்சரினால் டெனிஸ்வரன் அவர்களிற்கு அவரைப் பதவி நீக்கம் செய்வதாக எழுதப்பட்ட கடிதத்தினை (உங்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளேன். ஆதலினால் தங்களது சகல அலுவலக ஆவணங்களையும் உடனடியாக தங்கள் செயலாளரிடம் கையளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்) நடைமுறைப்படுத்துவதனை நிறுத்தி வைத்தல்.
இ) ஏற்கனவே ஆளுநரினால் டெனிஸ்வரன் வகித்த அமைச்சுப் பொறுப்புகளிற்குப் பொறுப்பாக அமைச்சர்களை நியமித்து அறிவிக்கப்பட்டிருந்த வர்த்தமானிப் பிரசுரத்தின் மேற்படி அறிவிப்புகளின் செயற்பாட்டினை நிறுத்தி வைத்தல்.
இவ் இடைக்காலத் தடை உத்தரவிற்கு மேலதிகமாக நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள விடயங்களாவன: இந் நீதிமன்றம் இடைக்கால நிவாரணத்தினை வழங்கியதன் அடிப்படையில், அரசியலமைப்பில் அமைச்சர்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு நியமன அதிகாரி (ஆளுநர்) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
(In view of the findings of this Court and the interim relief granted, it is for the appointing authority to consider the constitutional restriction on the number of Ministers and take suitable action.)
இவ் இடைக்காலக் கட்டளை மனுதாரரை (டெனிஸ்வரன்) சட்டப்படி பதவியிலிருந்து நீக்குவதனை எவ் விதத்திலும் தடுக்காது. ஆதலினால் அவை சீர் செய்ய முடியாத விடயங்களாக பிரதி வாதிகளிற்கு (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) அமையாது.
(On the other hand, the interim relief will not prevent the Petitioner from been duly removed from his post according to law. Hence there will be no irreparable mischief or injury to the Respondents.)
அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சர்களை நியமிக்கும் இவ்விடயத்தில் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டும்.
இங்கு ஆளுநர் நீதிமன்றக் கட்டளைக்கு அமைய அமைச்சர்களைக் குறைத்து மீள் நியமனம் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறு மீள் நியமனம் செய்ய வேண்டியவர்கள் யார் யார் என்பதனை ஆளுநரிற்கு ஆலோசனை வழங்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சரிற்கே உரியது.
இது வரை அவர் அதனைச் செய்யத் தவறிவிட்டார். இதற்கு மேலும் இவ் விடயத்திற்கு விளக்கமளிக்க முற்படுவேனாயின் நானும் ‘வாழைப்பழக்’ கதையின் ஓர் பாத்திரமாக மாறவேண்டியிருக்கும்.