கைது செய்யப்பட்ட என் தாய் நேர்மையானவர் எனக் கூறும் பிரபல தமிழ்ப்பட இயக்குனர்

சிலைக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா நேர்மையானவர் என அவரின் மகனான திரைப்பட இயக்குனர் மித்ரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைக் கடத்தல் வழக்குகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை மோசடி வழக்கில், அறநிலையத்துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா உட்பட ஆறு பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கவிதா, கடந்த ஜூலை 31-ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில்,பிணைக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அப்போது நீதிமன்றத்தில் முன்னிலையான பொன். மாணிக்கவேல், கவிதா கைது செய்யப்பட்டதுக்கான ஆவணங்களை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம். அதற்குப் பின் கவிதாவுக்கு பிணை வழங்குவது தொடர்பாக முடிவெடுங்கள் என கூறினார்.

இதையடுத்து வரும் திங்கள் இதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் கைதான கவிதா தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை என்ற திரைப்படத்தின் இயக்குனர் மித்ரனின் தாயாவார்.

 

கவிதாவின் கைது குறித்து மித்ரன் கூறுகையில், சிலை கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள எனது தாயார் கவிதா நேர்மையானவர்.

இரும்புத்திரை படத்தின் இயக்குனர் நான், ஆதாரம் இல்லாமல் அந்த படத்தில் நான் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.