மாதக்கணக்கில் சீரழிக்கப்பட்ட 39 சிறுமிகள்: வெளியான அதிர்ச்சிகர உண்மைகள்

இந்தியாவில் பெண்கள் விடுதியில் 11க்கும் மேற்பட்ட பெண்கள் மர்மமான காணாமல் போன விவகாரத்தில், விடுதியில் பல பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலம் முஸாப்பூர் நகர் விடுதியில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் அம்மாநில பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், 27 பெண்கள் விடுதியில் தங்கி இருப்பதாக ஆவணங்கள் தெரிவித்தன. ஆனால், அதில் இப்போது 11 பெண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையின் டாடா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டதில், முஸாபர்பூரில் இயங்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.

இது பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, குறித்த காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த சோதனையில் சிறுமிகள் மாத கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தாக தெரிய வந்தது. இந்நிலையில், மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை இன்று வெளியானதில், அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

இதனால், 39 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் உறுதி செய்யப்பட்டது. பீகார் விடுதியில் இருப்பவர்களாலும், அங்கு வருகை தந்தவர்களாலும் இந்த சிறுமிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், சிறுமிகள் சிலர் கருவுற்றதும், அதனை அறிந்த விடுதி நிர்வாகம் கருக்கலைப்பையும் செய்துள்ளது. இந்நிலையில், பொலிசாரிடம் சிறுமிகள் அளித்த புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன் பேரில் பொலிசார் வளாகத்தில் தோண்டிய போது எலும்புக்கூடுகள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும், விடுதியைச் சேர்ந்த 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

PTI