குரங்கு ஒன்றின் புகைப்படம் கடந்த சில நாள்களாக சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. பார்த்த உடனேயே மனதை வருத்தும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
முந்தைய காலகட்டங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களாகவே வாழ்ந்து வந்தனர். ஒரு நாளுக்கு அரைமணி நேரமாவது அனைவரும் சேர்ந்திருக்கும் சூழ்நிலை அமையும். அதுபோன்றே முந்தைய காலகட்டம் இருந்தது. ஆனால், நாம் தற்போது நவீன உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு வீட்டில் மூன்று பேருக்கு மேல் இருப்பதில்லை. அப்படி இருப்பவர்களும் தங்களின் பாதி நேரத்தை இணையம், செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் மட்டுமே செலவிட்டு வருகின்றனர். தற்போதுள்ள இளைஞர்கள், சிறுவர்களிடம் உறவுகள் மீதான பாசம் வெகுவாக குறைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஒருவருக்குப் பிறந்தநாள் அல்லது வேறு முக்கிய நிகழ்ச்சி என்றால் வாட்ஸ்அப் மூலம் ஒரு மெசேஜ் செய்தால் தற்போதைய கொண்டாட்டங்கள், வாழ்த்து பகிர்தல் முடிந்து விடுகிறது.
இப்படி நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் உலகில், மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் சமூகவலைதளத்தில் கடந்த நான்கு நாள்களாகதான் மனதை வருத்தும் புகைப்படம் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது. அதில் பாட்டி ஒருவர் காய்கறி மார்க்கெட்டில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில்குரங்கு ஒன்று உள்ளது. இதுதான் அந்தப் புகைப்படம். இதில் என்ன மனதை வருத்தக் கூடிய விஷயம் உள்ளது எனக் கேட்கலாம். ஆனால், அந்தப் படத்தில் உள்ளவர்கள் செய்யும் செயல் மற்றும் அவர்களின் உணர்ச்சிகள்தான் மிகவும் வேதனையைத் தருகிறது. அந்தப் பாட்டி ஏதோ ஒன்றைக் குரங்கிடம் புலம்புவது போன்றும் அதற்கு அந்தக் குரங்கு ஆறுதல் கூறுவதும் போன்றும் புகைப்படம் அமைந்துள்ளது. இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார், எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படம் கூறும் கருத்து மிகப் பெரியது. கவனிக்க ஆள் இன்றி தவிக்கும் முதியவருக்கு ஒரு குரங்கு ஆறுதல் கூறுகிறது. ஆனால், மனிதர்களுக்கு நேரமில்லை. இதைப் பார்க்கும்போது நான் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.