அகமதாபாத்: மற்ற ஆண்களின் கவனத்தை ஈர்த்து விடக் கூடாது என்பதற்காக 55 வயது காதலியின் இரு பற்களை அகற்றுமாறு காதலன் சித்ரவதை செய்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார்.
அகமதாபாத்தை சேர்ந்தவர் கீதாபென் (55). இவரது முதல் கணவர் இவரை சந்தேகப்படுவதால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ டிரைவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இருவரும் தங்கள் மனைவி, கணவன், குழந்தைகளை பிரிந்துதான் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 ஆண்டுகளாக நன்றாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் கடந்த ஆண்டு முதல் சந்தேகம் என்ற புயல் வீசத் தொடங்கியது.
இதனால் ஆட்டோ டிரைவர் கீதாபென் எந்த ஆணுடனும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு ஏராளமான துன்புறுத்தல்களை கொடுத்தார். மேலும் அவரது அழகை கெடுக்க அவரது முன் பற்களில் இரு பற்களை நீக்குமாறு கூறினார்.
இதற்கு கீதாபென் மறுப்பு தெரிவித்ததால் கடும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.
ஏற்கெனவே முதல் கணவன் சந்தேகமடைந்ததால் அவரை விட்டு இவரிடம் வந்தார். கடைசியில் இவரும் சந்தேகப்படுகிறார் என்ற விரக்தியில் அந்த பெண் தனது இரு பற்களை நீக்கிவிட்டார்.
இருப்பினும் விடாது கருப்பாக அந்த பெண்ணை வேலைக்கு செல்லக் கூடாது என்று வீட்டிலேயே நிறுத்திவிட்டார்.
பின்னர் ஜன்னல் வழியாக யாரையாவது பார்த்துவிடுவார் என கருதிய ஆட்டோ டிரைவர் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு அதன் வழியாக உள்ளே இருப்பவர்கள் தெரியாதபடி ஒரு பேப்பரை ஒட்டினார்.
எனினும் அடங்காத ஆட்டோ டிரைவர் ஒரு கட்டத்தில் ஆட்டோ ஓட்டும் போது தன் மனைவியையும் தன்னுடனே அழைத்து சென்று வந்தார்.
ஆட்டோவில் முன்சீட்டில் தன்னுடன் கீதா பென்னை உட்காரவைத்து கொண்டு சென்று வந்தார்.
இதனால் மிகவும் மனமுடைந்த கீதா பென் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து தப்பினார். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் பெண்களுக்கான உதவி மையமான அபயத்திடம் தொடர்பு கொண்டு இந்த பெண்ணின் கதையை கூறினார்.
இதையடுத்து அந்த நபர் மீது வழக்கு தொடுக்குமாறு மனநல மருத்துவர்கள் கூறியும் அந்த நபரை தான் காதலிப்பதால் புகார் கொடுக்க விரும்பவில்லை என்றார்.
அந்த பெண்ணின் சுதந்திரத்தில் தலையிட மாட்டேன் என்றும் தன் வேலையை பார்த்து கொண்டு செல்வதாகவும் ஆட்டோ டிரைவர் எழுதிக் கொடுத்தார்.