திமுக தலைவர் கலைஞரின் உடல்நலக்குறைவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் ஆகியவை தமிழக அரசியல் தளத்தில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தங்களால் மட்டுமே இட்டு நிரப்பிட முடியும் என்ற ரீதியில் தமிழ்திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
இவர்களில் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்து அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தும் விட்டார். ஆனால், ரஜினி தனது ரசிகர்களை திரட்டி அமைப்பாகும் முயற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், இந்துத்துவ கொள்கைகளில் பாஜகவுடன் ஒத்துபோகக்கூடிய ரஜினி அக்கட்சியில் இணைவார் எனவும் கருதப்பட்டது.
இந்த நிலையில், ரஜினியை வைத்து பெரிய திட்டத்தினை அரங்கேற்ற உள்ளது பாஜக. அது என்னவெனில், தனது ஏவலாட்களாக செயல்பட்டு வரும் எடப்பாடி – ஓபிஎஸ் ஆகியோரை அதிமுக தலைமைப்பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு ரஜினியை அமர்த்துவது என்பதுதான். இத்திட்டத்திற்கு ரஜினியும், அதிமுகவும் இசைவு தெரிவித்துள்ளார்களாம்.
மேற்கண்ட கூற்றினை உறுதிப்படுத்திடும் வகையில், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளிப்படையாகவே தங்களது கட்சியில் ரஜினி இணையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக தமிழகத்தில் காலூன்ற இயலாத பாஜக, ரஜினி – அதிமுகவை வைத்து தனது அடுத்தகட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதாகவே தெரிகிறது.