அமெரிக்க இராணுவ வீரர்கள் அனுராதபுரத்தில் 14 நாட்கள் சேவையில்

அமெரிக்க இராணுவத்தின் 65 வீரர்கள் நாளை (06) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அனுராதபுரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பசிபிக் ஏன்ஜல்” எனும் பெயரில் இந்நடவடிக்கை அழைக்கப்படுகின்றது. இதன் கீழ் சுகாதாரம், பல் மருத்துவ சேவை, சிறுவர் நல சேவை, பொறியியல் சேவைகள் என்பன அப்படையினரால் அப்பிரதேச வாசிகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் இலங்கை விமானப் படைப் பிரிவு வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை புதுப்பித்தல் நடவடிக்கைகளும் இவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் இரு நாடுகளினதும் இராணுவ வீரர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் எனவும், இதனால், பொது மக்களும் நன்மையடைவதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஹில்மன் தெரிவித்துள்ளார்.