மானிப்பாய் பொலிஸார் சிவில் உடையில் மறைந்திருந்து எட்டுப் பேரைக் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடமிருந்து 3 வாள்கள், இரண்டு உந்துருளிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு (ஏ.எல்) தோற்றவுள்ளவர்கள் என்றும் மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள், வீடுகள் மீதான தாக்குதல்கள், கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. தென்மராட்சிப் பிரதேசத்திலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றிருந்தன.
தென்மராட்சியின் கெற்பேலிப் பகுதியில் கடந்த வியாழக் கிழமை மகிழூர்ந்தில் சென்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அவர்கள் தப்பிச் செல்லும்போது மகிழூர்ந்து பழுதடைந்தது. பொலிஸார் அதன் சாரதியைக் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரிக்கு நேற்றுச் சிவில் உடையில் வந்தார்கள். வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேரைக் கைது செய்தார்கள். அவர்களின் அலைபேசியிலிருந்து மேலும் சிலருக்கு கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக அழைப்பு எடுக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அலைபேசி அழைப்பு ஊடாக, கைதானவர்களின் நண்பர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களைப் பார்ப்பதற்கு நண்பர்கள் வந்துள்ளார்கள்.
சிவில் உடையில் அங்கு மறைந்திருந்த பொலிஸார், அவர்களைக் கைது செய்தார்கள். அவர்களும் வாள்வெட்டுக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி வைத்தியசாலையில் பாதுகாப்பு அலுவலர் அறையில் தங்க வைத்திருந்த பொலிஸார், மானிப்பாய் பொலிஸ் வாகனம் வந்ததும் அதில் அவர்களை ஏற்றிச் சென்றார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.