`5 வருடக் காதல் முறிந்தது…!’ -காதலியைக் கொலை செய்ய துணிந்த காதலன்

காதலியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல், அப்பெண்ணைக் கொலை செய்ய முயற்சித்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காதல்

டெல்லி, அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய இளைஞரை, அப்பகுதி போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்தவர், அத்துமீறி அவரது வீட்டில் நுழைந்திருக்கிறார். அப்போது, தான் எடுத்து வந்த துப்பாக்கியால் பெண்ணை சுட்டுவிட்டு வீட்டில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு,  அக்கம் பக்கில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் பெண் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். `அந்த நபர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைவது, தப்பித்துச் செல்லும்’ அனைத்துக் காட்சிகளும் சி.சி.டி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை, ஆய்வு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளோம்.

அவரிடம் நடத்திய விசாரணையில், `அவர்கள் இரண்டு பேரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர். இதனிடையில், அப்பெண்ணுக்கு அண்மையில் வேறு ஒருநபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரம் அடைந்தவர், அப்பெண்ணைக் கொலை செய்யத் துணிந்திருக்கிறார்’ என்றார்.

`மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் பட்டாசு வெடிப்பதுபோல் பயங்கர சத்தம் கேட்டது’ என்று அசோக் விஹார் பகுதியைச் சேர்த வழக்கறிஞரான கர்மீஷ் ஷர்மா போலீஸிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.,`சத்தம் கேட்டு எனது அலுவலகத்தில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தேன். அப்போது வாலிபர் ஒருவர் தலைதெறிக்க ஓடினார். அதன்பின், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்தோம். அதன்பிறகு போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். சம்பவம் முழுவதும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது’ என அவர் தெரிவித்தார்.