வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 194 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் நாளை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பி.ப. 3 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆள்சேர்ப்பு செய்வதற்காக வட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த 353பேருக்கு, கடந்த மாதம் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் கல்வி அமைச்சினால், நேர்முகப் பரீட்சையுடன் இணைந்த பிரயோகப் பரீட்சை நடத்தப்பட்டிருந்தது.
அவர்களில் ஆள்சேர்ப்பு விளம்பரத்துக்கு அமைவாகத் தகைமை பெற்றிருந்த 194 பேர் ஆசிரியர் நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணப் பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பொது நூலக மண்டபத்துக்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணத்துடன் (தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு) அறிக்கையிடுமாறு மாகாணக் கல்வி அமைச்சுக் கேட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் (பெண்கள் – இளவர்ண சாறியுடனும், முஸ்லிம் பெண்கள் தமக்குரித்தான கலாசார உடைகளுடன் சமூகமளிக்கலாம். ஆண்கள் கறுப்பு வர்ண நீள் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற சட்டையும் (சேட்) அணிவதுடன் கழுத்துப் பட்டி (ரை) அணிதல் வேண்டும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் தொடர்பான விவரங்களை வடக்கு மாகாண சபையின் இணையத்தளம் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் ஆகியவற்றில் பார்வையிடமுடியும்.