சாவகச்சேரியில் வாள்களுடன் கைதானவர்களை பிணையெடுக்க முயன்ற மாகாணசபை உறுப்பினர் சயந்தன்!V

சாவகச்சேரியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர்களென நம்பப்படுபவர்களையும் விடுவிக்க தமிழரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான கே.சயந்தன் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டார். எனினும், அவரது கோரிக்கையை நிராகரித்த மல்லாகம் நீதிமன்றம் கைதானவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டது.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வாள்வெட்டு, அச்சுறுத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட ஏழு பேர் சாவகச்சேரி பகுதியில் பதுங்கியிருந்தனர். மானிப்பாய் பொலிஸார் நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை கைது செய்திருந்தார்கள்.

 

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடரி, செயின், இரும்பு பைப், மூன்று மோட்டார்சைக்கிள்களை பொலிசார் மீட்டனர். ரௌடிதனத்தில் ஈடுபட்டவர்களென கைதானவர்களை நேற்று காலை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டிருந்த சமயத்தில், கைதானவர்களின் உறவினர்களுடன் மாகாணசபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான கே.சயந்தன் அங்கு சென்றார்.

கைதானவர்களின் சட்டத்தரணியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரணைகளையும் அவதானித்தார். இதேவேளை, கைதானவர்களின் உறவினர்கள் சுமார் 40- 50 பேரளவில் பொலிஸ் நிலையத்தின் முன் கூடி, தமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டுமென கோரினர். சில பெற்றோர் தமது பிள்ளைகள் எந்த குற்றச்செயல்களுடனும் சம்பந்தப்படவில்லையென வாதாடினர். அந்த பெற்றோரை அழைத்து சென்ற பொலிசார், அவர்கள் வாள்வெட்டில் குழுவாக ஈடுபட்டதற்கு ஆதாரமான கைத்தொலைபேசி குறுந்தகவல்களை காண்பித்தனர்.

இந்த விடயம் தமக்கு தெரியாதென அவர்கள் கூறிய சம்பவத்தையும் அவதானிக்க முடிந்தது.

பின்னர் ரௌடித்தனத்தில் ஈடுபட்டவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிசார் முற்படுத்தினர். சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி கே.சயந்தன் ஆஜரானார். கைதானவர்களிற்கும், வாள்வெட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென சயந்தன் நீதிமன்றத்தில் வாதாடினார். எனினும், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிவான், கைதானவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசார் விசனம் தெரிவித்துள்ளனர். வாள்வெட்டு சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தும், மக்கள் பிரதிநிதிகளே அவர்களை பிணையெடுக்க முற்பட்டால், தம்மால் எப்படி வன்முறையை கட்டுப்படுத்த முடியுமென விசனம் தெரிவித்தனர்.