க.பொ.த உயர்தர பரீட்சை சமயத்தில் யாழில் களியாட்ட நிகழ்வு !

க.பொ.த உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலத்தில் யாழில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள களியாட்ட நிகழ்வு தொடர்பாக கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பாடகர்களை வரவழைத்து, யாழில் இரண்டு இடங்களில் சரிகமப என்ற களியாட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தென்னிந்திய பாடகர்கள் ரமணி அம்மா, வர்ஷா, ஐஸ்கரன் சிங், அர்ச்சனா ஆகியோரை அழைத்து இம்மாதம் 11,12ம் திகதிகளில் வடமராட்சியிலுள்ள கொலின்ஸ் விளையாட்டு மைதானத்திலும், யாழ் நகரிலுள்ள வெலிங்டன் தியேட்டர் சதுக்கத்திலும் இந்த களியாட்ட நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. நாளை கா.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பிக்கின்றன. கா.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் இந்த களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பலரையும் விசனமடைய வைத்துள்ளது.

உயர்தர பரீட்சை சமயத்தில் இந்த களியாட்ட நிகழ்விற்கு அனுமதியளித்தது யார் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் ஏற்பாட்டாளர்களிற்கு இன்றையதினம் சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்கள் சிலரும் தொலைபேசி வழியாக தமது ஆட்சேபணையை தெரிவித்துள்ளனர். உயர்தர பரீட்சைக்காலத்தை தவிர்தது, பிறிதொரு நாளில் நிகழ்வை நடத்தும்படி கோரியுள்ளனர். அதையும் மீறி நிகழ்வு நடத்தப்பட்டால், எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துள்ளதென்ற கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் கவனச்சிதறலை ஏற்படுத்தும் இந்த களியாட்ட நிகழ்வை அனுமதித்தது யார்?