வீடு திரும்பும் நேரத்தில் மீண்டும் மோசமான கருணாநிதியின் உடல்நிலை? அதிர்ச்சியில் மக்கள்

இரத்த அழுத்தம் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், கடந்த ஜூலை 28ம் தேதி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிவிட்டது. கடந்த நான்கு நாட்களாக காவேரி மருத்துவமனை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் நேற்றைய தினத்தில் விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், கருணாநிதிக்கு கல்லீரல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்திக்கிறது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கவில்லை.

எனினும் திமுக முக்கிய நிர்வாகிகள் மூலமாகவே இந்தத் தகவல் கட்சி நிர்வாகிகளிடம் பரவியிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் பலரும் இதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்தபடி இருக்கிறார்கள்.

கருணாநிதியை பார்க்க அவர் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். கடந்த 10 நாட்களாக சிகிச்சையில் இருக்கும் கருணாநிதியை பார்க்க, தயாளு அம்மாள் இன்று முதல்முறையாக வந்துள்ளார். அவருடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர் .

இந்தச் சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

திருநாவுக்கரசரின் இந்த பேட்டியின் மூலம், கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், காவேரி மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை வெளியான பிறகு தான் இத்தகவலை உறுதிப்படுத்த முடியும்.