யாழில் உள்ள தீவு ஒன்றில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஆவா குழு!

யாழ். மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றில் ஆவா குழு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாக மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது குழுவுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான கருவியாக இவ்வாறான பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள் சீர்குலைந்துள்ள நிலையில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆவா குழு சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் இணைந்து யாழ். மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு படகை வாடகைக்கு அமர்த்தி சென்றுள்ளனர்.

அந்த தீவில் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆவா என அழைக்கப்படும் வாள்வெட்டு குழு பிரதான நபர் வருடத்தில் 3 தடவைகள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வாள்வெட்டு குழுக்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டில் ஈடுபடும் குழு ஒன் று 25க்கும் மேற்பட்ட படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கடலுக்குள் செல்வது தெரியவில்லை.

வாள்வெட்டு குழுவின் புகைப்படங்களும் கிடைக்கிறது. ஆனால் அவர்களை கைது செய்ய முடிவில்லையா? எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் பலர் ஆவா குழுவிற்கு பலிக்கடா ஆக்கப்படுகின்றனர். வாள்வெட்டு குழுக்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கிறது.

இந்நிலையில் பொலிஸார் வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் புகைப்படங்களை எடுக்கிறது.

அவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய படங்கள் கிடைக்கிறது. ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை என்றால் என்ன பயன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.