குறட்டையை முற்றிலுமாக விரட்டுவது எப்படி?

பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு குறட்டை விடுவது என்பது ஒரு இயல்பாய், ஓர் பழக்கமாய் இருக்கிறது; இந்த குறட்டை எனும் பழக்கம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை அனைவரிடமும் காணப்படும் ஒரு சாதாரண பழக்கமாக காணப்படுகிறது. இது ஓரளவுக்கு இருக்கும் பட்சத்தில் பிரச்சனையில்லை; ஆனால் எல்லை மீறி மற்றவர் தூக்கத்தை கலைத்து, குடும்பத்தையே துயில் எழ வைக்கும் நிலையில் இருந்தால், அது குடும்பம் கலைவதற்கும், குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தவும் காரணமாகி விடும். முக்கியமாக கணவன் – மனைவி பிரிவிற்கு முதன்மை காரணமாக கணவர் அல்லது மனைவி விடும் குறட்டை காரணமாகி அவர்களை பிரித்து விடுகிறது.

அப்படிப்பட்ட கொடூர குறட்டையை குறைத்து, முற்றிலுமாக அகற்றுவது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறியலாம் வாருங்கள்!

ஏன் ஏற்படுகிறது? உங்கள் வாழ்க்கைத்துணையின் தூக்கத்தைக் கெடுத்து, குடும்பத்தைக் கலைக்கும் இந்த குறட்டை எதனால் நம்மில் ஏற்படுகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை துணையை அல்லது குடும்பத்தை பாதிக்கவில்லை எனினும் அது உங்கள் உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது; இல்லை, உங்கள் உடலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தான் குறட்டை ஏற்படுகிறது என்ற உண்மையை உணருங்கள். குறட்டையை ஏற்படுத்தும் மிக முக்கியமான காரணிகள் அல்லது நோய்கள்: மூச்சுக்குழல் அடைப்பு (உறக்கத்தின் போது) அதிக உடல் எடை மூக்கு, தொண்டை, வாயின் அமைப்பு மற்றும் அவற்றில் ஏற்பட்டுள்ள குறைபாடு உறக்கமின்மை அல்லது தவறான உறக்க முறை உறங்குமுன் மது அருந்துதல், புகை பிடித்தல் இவ்வாறு ஏற்படும் குறட்டையை எப்படி சரிசெய்வது என்று இப்பொழுது படித்தறியலாம்.

சரியான உடல் எடை அதிக உடல் எடை காரணமாக குறட்டை ஏற்படுகிறது; முதலில் குறட்டையை கொண்டுவரும் உடல் எடை ஒன்றன் பின் ஒன்றானாக அனைத்து வித நோய்களையும் உங்கள் உடலில் ஏற்படுத்தும். எனவே, முதல் வேலையாக உடலின் அதிகப்படியான எடையை குறைத்து, உடலின் உயரத்திற்கேற்ற உடல் எடை இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் சரியான எடையில் இருந்தாலே குறட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, பின் முற்றிலும் ஏற்படாது போய்விடும்.

உறங்கும் முறை முதுகு அதிகநேரம் படுக்கையில் படுமாறு இருந்தால் அது தொண்டையை அடைத்து குறட்டை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. எனவே, அவ்வப்போது ஒருசாய்த்து படுத்து உறங்க வேண்டும். மேலும் உறங்கும் பொழுது தலையானது 4 அங்குல உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்; இது காற்று செல்லும் மூச்சுக் குழல்கள் திறந்த நிலையில், அடைபடாது இருக்க உதவும். இவ்வாறு சரியான உறக்க முறையை பின்பற்றுவது குறட்டையை முற்றிலுமாக போக்க உதவும்.

நாசித்துவாரங்கள் உங்கள் மூக்கில் சளி அல்லது தூசுக்கள் அடைபட்டு இருந்தால், அவை மூச்சுப்பாதையை அடைத்து, குறட்டையை ஏற்படுத்தும். எனவே, மூக்கில் உள்ள கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றி, நாசித்துவாரங்கள் வழியாக காற்று எளிதாக சென்று வருமாறு ஆவன செய்ய வேண்டும். இது குறட்டையை கட்டுப்படுத்த உதவுவதோடு, மூச்சுப்பாதையை சீர் செய்து, சீராக மூச்சுவிடுவதற்கும் உதவியாக இருக்கும்

அலர்ஜி உடலில் எத்தன்மை அலர்ஜி குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனடியாக மருத்துவ உதவியுடன் குணப்படுத்த வேண்டும். அவற்றை குணப்படுத்தாது விட்டுவிட்டால், அது குறட்டையை அதிகப்படுத்தி, உடலை பலவீனமாக்கி பல நோய்கள் உடலில் ஏற்படக் காரணமாகி விடும். எனவே, அலர்ஜி தொல்லையை சரியாக கண்டறிந்து, குணப்படுத்திவிட வேண்டும்

மூக்கு, தொண்டை, வாயின் அமைப்பு சில நபர்களின் உடலில் வாய், தொண்டை, மூக்கு இவற்றின் அமைப்பு சரியாக இல்லையெனில் குறட்டை தொந்தரவு ஏற்படலாம். எனவே, உங்கள் தூக்கத்தின் போது, அதிகம் குறட்டை ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தித்து உங்கள் உள்ளுறுப்புகள் சரியான அமைப்பைக் கொண்டிருக்கின்றனவா இல்லையா என்று சோதித்து அறிந்து கொள்ளவும்; சோதனை முடிவுகளுக்கு ஏற்ற சிகிச்சையையும் உடனடியாக மேற்கொள்ளவும்.

தவிர்க்கவும் உறங்கச் செல்லும் முன் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் தூக்க மாத்திரைகள், மற்ற போதை மருந்துகள் உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இந்த தவறான பழக்க வழக்கங்களால், உங்கள் உடல் பல நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த நிலையை சுட்டிக்காட்டும் ஒரு பிள்ளையார் சுழியாக தான் உங்கள் உறக்கத்தில் அதிகப்படியான குறட்டை ஏற்படுகிறது என்று உணர்ந்து, மேற்கூறிய பழக்கங்களை தவிர்க்க முயலுங்கள்.

போதிய அளவு உறக்கம் உடலிற்கு தேவையான அளவு உறக்கம் கொள்ள வேண்டும்; உடலுக்கு போதிய உறக்கத்தை தராமல் விட்டு விட்டாலோ அல்லது அதிகப்படியாக உறங்கி சோம்பேறியாக இருந்தாலோ அது உடலில் பலவித நோய்கள் ஏற்பட காரணமாகிவிடும். எனவே, உடலுக்கு போதுமான அளவு மட்டுமே உறங்குதல் வேண்டும். இது உறக்கத்தின் பொழுது குறட்டை ஏற்படாமல் தடுக்க உதவும்

மேலும் இந்த வாழ்வியல் பழக்க முறைகளை சரிபடுத்தினாலே, உடலின் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்; இந்த பழக்கங்களை சரியாக கடைபிடித்தால், உறக்கத்தின் பொழுது ஏற்படும் குறட்டையை முற்றிலுமாக நீக்கி புத்துணர்வுடன் மகிழ்ச்சியுடன், முக்கியமாக குடும்பத்துடன் வாழலாம்.