மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது பா.ஜ.க.
மாநிலங்களவையில் துணை சபாநாயகராக இருந்த கேரளாவைச் சேர்ந்த பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் இரண்டுமுறை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.ஜே.குரியன். இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, இப்பதவிக்கான தேர்தல் தேதியை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், எம்.பி.ஹரிவன்ஷ் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையின் தலைவராக துணைக் குடியரசுத் தலைவரே பொறுப்பு வகிப்பது மரபு. அதோடு, மாநிலங்களவையில் இருக்கும் உறுப்பினர்களில் ஒருவர், துணை சபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்நிலையில், வரும் 9-ம் தேதி துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. தற்போது, அப்பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 246. இதில், 123 எம்.பி.களின் ஆதரவைப் பெறுபவர்கள் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.
அதன்படி, அ.தி.மு.க-வின் 13 எம்.பி.க்களின் ஆதரவைச் சேர்த்து, பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 102 வாக்குகள் கிடைக்கும். ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி அணிகளுக்கு 108 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதுவரையிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிக முறை துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.