தாமதமாகும் சந்திராயன்-2… இந்தியாவுடன் போட்டிபோடும் இஸ்ரேல்

டிசம்பரில் இஸ்ரேலும் சந்திரனுக்கு விண்கலம் அனுப்ப இருப்பதால், `நிலவுக்கு நான்காவதாக யார் விண்கலம் அனுப்புவார்கள்?’ என இரு நாடுகளுக்கும் இடையே போட்டி உருவாகியுள்ளது.

சந்திராயன்

இந்தியா விண்வெளித்துறையின் கனவுத் திட்டமான சந்திராயன்-2 ஏவுகணைத் திட்டம் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்ரல் 23-ம் தேதியில் விண்ணில் செலுத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்த சந்திராயன் மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் இஸ்ரேலும் சந்திரனுக்கு விண்கலம் அனுப்ப இருப்பதால், `நிலவுக்கு நான்காவதாக யார் விண்கலம் அனுப்புவார்கள்’ என இரு நாடுகளுக்கும் இடையே போட்டி உருவாகியுள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஏவுகணைகளை அனுப்பியுள்ளன.

சந்திராயன் 2 விண்கலத்தில், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்னும் கருவிகள் உள்ளன. சந்திராயன் 1 போன்று இது நிலவைச் சுற்றி வருவது மட்டுமின்றி, நிலவில் தரையிறங்கி ரோவர் என்னும் கருவி மூலம் சந்திரனின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களை ஆய்வு செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சவாலான திட்டமான இரண்டாம் சந்திராயனை மிகவும் கவனத்துடன் வடிவமைத்துள்ளதாகவும் சந்திராயன் விண்கலத்தை 4 டன் எடையைத் தூக்கும் திறனுள்ள GSLV Mk II ஏவுகணையில் செலுத்தவிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சந்திராயன் 2 திட்டத்தைப் பற்றி இஸ்ரோவின் இயக்குநர் சிவன் பேசும்போது, “இந்தத் திட்டம் முற்றிலுமாக இந்திய விஞ்ஞானிகளால் இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. விண்கலம் சந்திரனை அடைந்ததும் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் பிரிந்து நிலவில் தரையிறங்கும் பின் லேண்டரினுள் இருக்கும் ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவி நிலவின் மேற்பரப்பை 100 மீட்டர் தூரத்துக்கு ஆய்வு செய்யும். நிலவைப் பொறுத்தவரை ஒருநாள் அளவும் பூமியைப் பொறுத்தவரை 14 நாள்கள் கால அளவும் கொண்டதாக இருக்கும். ஆய்வு செய்த ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ரோவரிலிருந்து படங்களும் ஆய்வுகளின் தோராயமான முடிவுகளும் ஆர்பிட்டர் மூலம் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். அதைக்கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்வர்” என விளக்கியுள்ளார்.