யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களை நடத்தும் குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு உள்ளதாதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாள்வெட்டு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த 7 பேரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சில தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, இளைஞர்களுக்கும் சாவகச்சேரி பொலிஸார் சிலருக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களது தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 3 பேருக்கு எதிராக, ஏற்கனவே பல வழங்குகள் நிலவையில் உள்ளன. அவை வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்றும் மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த 7 பேரையும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மானிப்பாய் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது இளைஞர்கள் சார்பில் முன்னிலையான வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் பிணை விண்ணப்பம் செய்தார்.
ஆனால் குறித்த பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதவான் ஏழு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.