குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ரத்த அழுத்த குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து மாலை வெளியான அறிக்கையில் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் நிறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்று காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக இன்று மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், மாலை 6.10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதை காவேரி மருத்துவமனை அறிவித்தது.
இந்நிலையில், அரசியலில் மூத்த தலைவர் என்பதால் சென்னை உட்பட பல இடங்களில் பாதுகாப்பு கருதி மிகுந்த பாதுகாப்பு போடபட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்வதில் சட்ட சிக்கல்கள் அதிகமாக இருப்பதால் சென்னை காந்தின் மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தர தமிழக அரசு தயாராக உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் சற்று சலசப்பு ஏற்பட்டுள்ளது.