கணவரின் ஆயுள் நீடிக்க, விலகிச் சென்றவர் வீடுவர..

மனித மாண்பே அடுத்த‍வர் நலன் பேணுவதே! குறிப்பாக பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் நீடித்து, நலமோடு வளமோடு வாழ விரும்புவார்கள். அவர்களுக்கான மிகச்சிறந்த பதிவு இது.

மாங்கல்யத்தைக் காத்தருளும் மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு (Karadaiyan Nonbu) எனும் பண்டிகை மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொட க்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில்…

சுமங்கலிகள், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம் காக்கவும் அவர்களின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகவும் சாவித்திரி தேவி ( Savithri Devi) யை வழிபட்டு நோன்பு இருப்பது காரடையான் நோன்பு ( Karadaiyan Nonbu) எனும் வைபவமாக, பண்டிகை ( Pandigai) யாக, விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சாவித்திரி தன்கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கலநாண் எனப்படும் தாலியானது நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள்.

இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜையை மேற்கொள்வதின் மூலம் தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். அவ்வளவு ஏன்… பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

காரடையான் நோன்பு பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச – பூஜை) வழிபடுவார்கள். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். ‘மாசிக்கயிறு பாசிபடியும்’ என்று பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாக போற்றப்படுகிறது!

அன்றைய நாளில், பெண்கள் அதிகாலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகிலேயே அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாக பாவித்து வழிபட வேண்டும்.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து விரதம் மேற்கொள்வது சிறப்பு! பூஜை முடிந்ததும், நோன்புக் கயிற்றை எடுத்து ‘நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!’ என்று அம்பாளை நினைத்து வணங்கி, கணவரின் கையாலேயே, கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்.

இந்நாளில்… நல்ல நேரம் பார்த்து பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர். நோன்பு அடை அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தார் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், நைவேத்தியம் செய்வது வழக்கம்! இதில் தவறேதும் இல்லை என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணெய் இலையில் வைத்து, நோன்புச்சரடை அம்மனுக்கு சாற்றி, துளசி சேர்த்துக் கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். மொத்தத்தில் பெண்கள் அனைவரும் கணவருக்காக சிரத்தையாக செய்யும் விரதமே காரடையான் நோன்பு. பெண்களே. காரடையான் நோன்பை மறக்காமல் கடை பிடியுங்கள்.

உங்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியம் பெருகும். நோய் வாய்ப்பட்ட கணவர் கூட எழுந்து நடமாடத் தொடங்கி விடுவார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பம் தழைக்கும். வாழையடி வாழையென வளரும்! இல்லத்திலும் உள்ளத்திலும் இருள் அகலும். ஒளி பரவும். உன்னதமான வாழ்க்கை வாழ்வீர்கள்!