வடக்கை அபிவிருத்தி செய்வதே தமது அரசின் பிரதான இலக்கு எனக் கூறியிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. வடக்கின் அபிவிருத்தி தொடர்பான அரசின் திடீர் கரிசனையை ரணிலின் கருத்து வௌிப்படுத்துகின்றது.
நாட்டில் வடபகுதியே முழு நாட்டிலும் அபிவிருத்தியில் அதிக பாதிப்பைச் சந்தித்தது. நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது, வடபகுதி அபிவிருத்தி குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது.
போரைக் காரணங்காட்டியே நெடுங்காலமாக வடக்கின் அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும். போர் ஓய்ந்த நிலையிலும், வடக்கு புறக்கணிக்கப்பட்டு வந்ததால் அபிவிருத்தியில் பின்தங்கிக் காணப்படுகின்றது. வடக்குக்கும் வறட்சிக்கும் நீண்ட தொடர்புகள் உள்ளன. போதிய நீர் வளம் இல்லாமை, குறைந்தளவு மழை வீழ்ச்சி ஆகியவை வடக்கை ஒரு வறண்ட பிரதேசமாக அடையாளம் காட்டி நிற்கின்றன.
மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் பின்னணியில் வடக்கில் சிங்களக் குடியேற்றம் ஆதிக்கம் செலுத்துகிறதா?
மகாவலி அபிவிருத்தித் திட்டம் தற்போதைய தலைமை அமைச்சர் தலைவராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. மறைந்த காமினி திசநாயக்க இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தார். பெரும் நிதி இந்தத் திட்டத்திற்காகச் செலவிடப்பட்டது.