கருணாநிதியின் கருப்பு கண்ணாடிக்கு பின் இவ்வளவு கண்ணீர் துயரங்கள் மறைந்துள்ளதா?…

எம்ஜிஆர் என்றதும் எப்படி தொப்பியும், கருப்பு கண்ணாடியும், சட்டென நினைவுக்கு வருமோ அப்படி, கலைஞர் கருணாநிதி என்றதும் அனைத்து மக்களுக்குமே நினைவுக்கு வருவது அவரின் கருப்பு கண்ணாடிதான். பிற்காலத்தில் இதில், மஞ்சள் துண்டும் சேர்ந்து கொண்டது.

ஆனால், இந்த கருப்பு கண்ணாடி ஏதோ அடையாளத்திற்காகவோ, ஸ்டைலுக்காகவோ போடப்பட்டது கிடையாது.

அந்த கருப்பு கண்ணாடியின் பின்னால் பெரும் வலி நிறைந்த வரலாறு உள்ளது. இந்த வலியையும் பொறுத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலம் பயணித்தவர்தான்தான் கருணாநிதி.

அந்த கருப்பு கண்ணாடியின் பின்னணியில் உள்ள கருப்பு சரித்திரம் இதுதான். 1953ம் ஆண்டு பரமக்குடியில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்றுக்கொண்டு, அவர் காரில் திருச்சி சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது கார்.

கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மைல் கல்லில் மோதி, மைல் கல் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதி நின்றது அந்த கார். அந்த அளவுக்கு மோசமான ஒரு விபத்து அது. காருக்குள் இருந்த கருணாநிதியும், அவர் தோழமைகளும் உருட்டி தள்ளப்பட்டனர். நல்லவேளையாக கலைஞரின் நண்பர்களுக்கு காயம் இல்லை. ஆனால் கருணாநிதியின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது.

கருணாநிதியின் முகமே வீங்கியது. இடது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். இதையடுத்து, கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு, 12 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒருவழியாக சமாளித்து பணிகளையாற்ற துவங்கிய நிலையில், 1967ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஒரு கார் விபத்தில் சிக்கினார் கருணாநிதி.

இந்த விபத்து காரணமாக, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று. 1971ம் ஆண்டில் அமெரிக்கா சென்றார் கருணாநிதி. பால்டிமோர் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் கண் வலி சற்று குறைந்த போதிலும், அவ்வப்போது வலி தொடரவே செய்தது. அந்த வலி அவரை கடைசி காலம் வரை வேதனைப்படுத்திக் கொண்டே இருந்தது.