குடாநாட்டை உலுக்கும் குள்ளர்களின் அட்டகாசத்திற்கு விரைவில் முடிவு…. களத்தில் இறங்கி செயற்பட தயாராகும் விசேட குழுக்கள்……!!

யாழ். அராலிப்பகுதியில் இடம்பெறுவதாக கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்களின் அச்சுறுத்தலான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அந்த வகையில், உள்ளூர் இளைஞர்கள் பத்து பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.யாழ். வட்டுக்கோட்டை – அராலி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இனந்தெரியாத நபர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டவுள்ளன.இந்த குழுவினர் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும், உடனடியாகவே அந்தக் குழுக்கள் அமைப்படும் என்று யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும், மக்களைப் பீதிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் சிவில் பாதுகாப்புக் கூட்டம் அராலி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சூழலில் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.இதன் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அராலி பகுதியில் கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக குள்ள மனிதர்கள் போன்று இருப்பதாகவும் பாயும் சப்பாத்துக்களை அணிந்தவாறும், முகம் மற்றும் உடல் முழுவதையும் கறுப்பு உடையினால் மறைத்தவாறு வரும் சிலரே இவ் அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அப் பகுதி மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக அச்சத்தின் மத்தியில் வாழந்து வருகின்ற நிலையில், தற்போது பொலிஸார் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.