சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறது அமெரிக்காவின் அமைதிப் படையணி

அமைதிப் படையணி செயற்திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்காவும் அமெரிக்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

சிறிலங்கா கல்வி அமைச்சில் இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது.

அமைதி படையணி செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில் இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளதாக, சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

இது புதிய உடன்பாடு இல்லை என்றும் புதுப்பிக்கப்பட்ட உடன்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்திட்டத்தின் கீழ், சிறிலங்காவில் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், இளைஞர்களுக்கு ஆங்கில மொழி கல்வி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைதிப் படையணியின்  25 பேர் கொண்ட முதலாவது குழு 2019 ஆம் ஆண்டு இறுதியில் சிறிலங்கா வரவுள்ளது.

சிறிலங்காவில் 1962ஆம் ஆண்டு தொடக்கம், 1998ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அமைதிப் படையணியைச் சேர்ந்த 370 தொண்டர்கள், கல்வி, சுகாதாரம், இளைஞர் அபிவிருத்தி போன்ற துறைகளில் பணியாற்றினர்.

1998ஆம் ஆண்டு இந்த செயற்திட்டம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.