ட்ரம்ப் ஆட்சிக்காலம் முடிவதற்குள் விண்வெளிப்படை உருவாக்கப்படும்..

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அடுத்த அத்தியாயமாக வருகிற 2020-ம் ஆண்டிற்குள் விண்வெளிப்படை உருவாக்கப்படும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஆட்சிக்காலம் முடிவதற்குள் விண்வெளிப்படை உருவாக்கப்படும் - அமெரிக்க துணை அதிபர் தகவல்

வாஷிங்டன்:

அமெரிக்க ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை, கப்பல் படை, கடலோர பாதுகாப்பு என 5 பிரிவுகள் உள்ளன. இந்த நிலையில் 6-வது படைப் பிரிவாக விண்வெளிப்படை உருவாக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமாக பென்டகனுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், அமெரிக்கா வெறுமனே விண்வெளியில் இருப்பை கொண்டிருப்பது போதுமானதாக இருக்காது. நாம் கண்டிப்பாக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

எனவே 6-வது விண்வெளிப்படையை நாம் உடனடியாக உருவாக்க வேண்டும். அதுகுறித்து ராணுவம் மற்றும் பென்டகனுக்கு நான் உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், இதற்காக காலதாமதம் ஆகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விண்வெளிப்படையை உருவாக்கும் நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் பென்ஸ் கூறுகையில், ‘அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் விண்வெளிப்படையை உருவாக்கும் பணிகள் நிறைவடையும். விண்வெளி சுற்றுவட்டப்பதையில் ரஷியா மற்றும் சீனா நாடுகள் அதிநவீன திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அவர்களின் செயற்கை கோள்கள் அமெரிக்க செயற்கை கோள்களின் சுற்று வட்டப்பாதைக்கு நெருங்கி வரும் வகையில் சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. இதனால், அமெரிக்க செயற்கைகோள்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.

எனவே, இவற்றை எல்லாம் முறியடித்து சீனா மற்றும் ரஷியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் புதிய அத்தியாயமாக 2020-ம் ஆண்டுக்குள் விண்வெளிப்படை உருவாக்கப்படும்’ என தெரிவித்தார்.