மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும்.
கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளை செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளை விட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்து கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர்தான் இதன் பாதிப்பே வெளியில் தெரியவரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை.
“கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாததால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை, கல்லீரலில் இருந்து பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடுவதால் வரக்கூடியது என, இரண்டுவிதமான காமாலைகள் உண்டு” என்கிறார் மருத்துவர் விவேகானந்தன்.
“கல்லீரலில் இருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாக குடலுக்குச் சென்றுவிடவேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும். பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் (Duodenum) பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும்போது காமாலை உண்டாகும்.
கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாததால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை ‘ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ் (Hepatocellular jaundice)’ என்று சொல்வார்கள். இதனை ‘மெடிக்கல் ஜான்டிஸ்’ என்றும் அழைக்கலாம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ‘ஹெப்படைட்டிஸ்’ வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் போன்ற காரணங்களால் வரலாம்.
சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் பூச்சி மருந்து குடிப்பார்கள். அவர்களுக்கும் வரலாம். டி.பி போன்ற பாதிப்புகளுக்கு மாத்திரை சாப்பிட்டு கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கும் இந்த வகை காமாலை வரும். நம் நாட்டைப் பொறுத்தவரை, வைரஸ், மது, கொழுப்பு சார்ந்த ஈரல் நோய்கள், சில மாத்திரை மருந்துகளால் இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும்.
மஞ்சள் காமாலை குறித்து நம் மக்களிடத்தில் போதிய விழிப்புஉணர்வு இல்லை. ‘ஹெப்படைட்டிஸ்’ வைரஸ் கிருமித் தொற்றால் உருவாகக்கூடிய மஞ்சள் காமாலையால் அதிகமான மக்கள் உயிரிழக்கிறார்கள். இது எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களை விட அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.
மஞ்சள் காமாலை பாதிப்பு இருக்கும் பலர், அதை அறியாமல் வெறும் உடல் சூடுதான் என்று கவனிக்காமல் இருந்துவிடுகிறார்கள். வெயிலால், உடல் சூட்டால் சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் ஒரு நாளில் சரியாகிவிடும். கண்கள் மஞ்சளாக மாறாது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசோனிக் பரிசோதனைகளின் மூலமாக இதனைக் கண்டறியமுடியும்.
‘ரத்தப் பரிசோதனையின் மூலமாக, பாதிப்பு எவ்வளவு இருக்கிறது’, ‘கல்லீரல் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது’ (Liver functioning test) என்பதைக் கண்டறியலாம். அதுதவிர, எந்த வகை என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
ஹெப்படைட்டிஸ்-ஏ அல்லது இ வைரஸ் பாதிப்பால் உருவாகும் மஞ்சள் காமாலை ஒருவாரத்தில் சரியாகிவிடும். சி – வைரஸ் பாதிப்பு என்றால் குறைந்தது மூன்று மாதங்களாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிடவேண்டும். ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் பாதிப்பு என்றால் ஒரு வருடத்துக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும். சிலர் வாழ்நாள் முழுவதும்கூட சாப்பிட வேண்டிய சூழல்வரும். மது அருந்தியதால் உண்டான மஞ்சள் காமாலை என்றால் மது அருந்துவதை நிறுத்தினால் நான்கில் இருந்து ஆறு மாதத்துக்குள் சரியாகிவிடும். கொழுப்பு காரணமாக உருவான மஞ்சள் காமாலை என்றால் அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, உடற்பயிற்சிகள் செய்தால் பாதிப்பைக் குறைக்க முடியும்.
கல்லீரலுக்குத் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இருந்தாலும், அது பாதிக்கப்பட்டிருக்கும்போது மேலும் பாதிப்பை அதிகரிக்கக்கூடிய எந்தச் செயலையும் செய்யாமல் இருக்கவேண்டும். முறையான மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றினால் மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்” என்கிறார் மருத்துவர் விவேகானந்தன்.