தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றிரவு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவாஜிலிங்கம், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இது குறித்த செய்திக்கு முன்னதாக ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியிருக்கிறது. தமிழ் அரசியல் தரப்புக்கள் அனைத்திற்குள்ளும் நடைபெறும் உள்வீட்டு விவகாரங்களை தமிழ்பக்கம் உடனுக்குடன் அப்படியே வெளியிட்டு வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் விடயத்திலும் அப்படியே. நேற்றைய சந்திப்பு குறித்து தகவல் திரட்டுவதற்காக, பலரை தொடர்பு கொண்டபோதும் எல்லோரும் வாய் திறக்க நிறைய தயங்கினார்கள். உள்வீட்டு விசயங்கள் வெளியில் கசிகிறது, யார் அந்த கறுப்பாடு என பலரும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிக்கலால், நேற்றிரவே முழுமையான விபரத்தை வெளியிட முடியவில்லை. சந்திப்பில் கலந்து கொண்ட பலருடன் பேசியே தகவல்களை திரட்ட முடிந்தது.
எதையும் வெளிப்படையாக பேசும், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த சந்திப்பு குறித்து தமிழ்பக்கத்திடம் சில விடயங்களை கருத்து தெரிவித்தார்.
“வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரம் இரண்டும்தான் முக்கியமாக ஆராயப்பட்டது. அடுத்த வார ஆரம்பத்தில் மாகாணசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.
முதலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை விவாதித்தோம். விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியில் சென்று தனித்து போட்டியிட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்திக்குமென நாங்கள் தெரிவித்தோம். நான், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதை வலியுறுத்தும் தொனியில் தெரிவித்தோம். வடக்கில்- குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனிற்கு வலுவான ஆதரவிருப்பதை சம்பந்தருக்கு தெரியப்படுத்தினோம்.
புளொட் தலைவர் சித்தார்த்தனும் எமது கருத்தை ஆமோதித்தார். விக்னேஸ்வரனுக்கு உள்ள கணிசமான ஆதரவுள்ளது. நாம் தனித்து போட்டியிட்டால் நிச்சயம் பின்னடைவை சந்திப்போம் என அவரும் வலியுறுத்தினார்.
இந்த சமயத்தில் மாவை சேனாதிராசாதான் இடையிடையே குறுக்கிட்டு மாறான அபிப்பிராயத்தை தெரிவித்தார். விக்னேஸ்வரன் தனித்து கேட்டால், தமிழ் தேசிய நிலையிலுள்ள வாக்குகள் பிரியும், பின்னடைவு வரும் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால், கூட்டமைப்பிற்கு விக்னேஸ்வரன் செய்ததை நீங்கள் மறக்ககூடாது என்று கூறினார்.
இந்த விவகாரத்தின் இறுதிக்கட்டத்தில், கருத்து தெரிவித்த மாவை சேனாதிராசா- இப்பொழுது விக்னேஸ்வரனிற்கு ஆதரவிருப்பதை போலத்தான் தெரிகிறது. தெரியும். ஆனால் நாம் பிரச்சாரங்களை ஆரம்பித்து, வேலை செய்ய தொடங்க மக்கள் எங்களை நோக்கி வந்து விடுவார்கள். அதனால் விக்னேஸ்வரனை நினைத்து பயப்பட தேவையில்லையென கூறினார் என்றார் என தெரிவித்தார்.
இன்று காலையில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சந்திப்பில் நடந்த இன்னொரு விடயத்தை குறிப்பிட்டார்.
“முதலமைச்சர் விவகாரத்தில் பங்காளிக்கட்சிகள் இரண்டும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஐயாவும் (சம்பந்தன்) அதை ஆமோதிப்பதை போல தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில்- “விக்னேஸ்வரனிற்கு சவால் அளிக்ககூடிய ஒருவர் வெளியில் இல்லையா? ஏன் அப்படியொருவரை நீங்கள் சிந்திக்கவில்லை? அப்படி யாராவது இருக்கிறார்களா?“ என ஐயா கேட்டார்.
விக்னேஸ்வரனிற்கு எவ்வளவு ஆதரவிருந்தாலும் சரி, நாம் தனித்து போட்டியிடுவோம் என மாவையர் அங்கு வலியுறுத்தியிருந்தார். அதாவது, நான் போட்டியிடுவேன் என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால், அவரை ஒரு வேட்பாளராக கணிக்காததைபோல, வெளியில் யாராவது நல்ல வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என ஐயா கேட்டிருக்கிறார்.
இது மாவையருக்கு பெரிய அதிருப்தி. கூட்டம் முடிந்ததும் எங்கள் பலருடன் இதைப்பற்றி பேசினார். கட்சியாக நாம் அடுத்து என்ன செய்யலாமென, அடுத்த ஒருசில நாட்களில் சிந்திக்கவுள்ளோம்“ என்றார்.
விரைவில் தமிழரசுக்கட்சிக்குள் அலசி ஆராய்ந்து, முதலமைச்சர் வேட்பாளர் பற்றி அறிவிப்பதாக சம்பந்தன், மாவை இருவரும் கூட்டாக சொன்னதுடன் இந்த விடயம் முடிவிற்கு வந்தது.
அடுத்ததாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற விவகாரம் ஆராயப்பட்டது. இந்த பேச்சு ஆரம்பித்தபோது, “ஓம்.. அது பேசி முடிக்க வேண்டிய விசயம்தான். விரைவில் கட்சிக்குள் பேசி, ஒரு முடிவிற்கு வருகிறோம்“ என சம்பந்தன் கூறினார்.
இதன்போது, ரெலோ தரப்பிலிருந்து- “கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் இதைப்பற்றி சொல்லிவிட்டோம். 10ம் திகதி தற்கு ஒரு முடிவெடுப்பதாக சொல்லிவிட்டோம். நீங்கள் இப்படி சொன்னால் நாம் என்ன செய்வது?“ என செல்வம் அடைக்கலநாதன் கேட்டார். விரைவில் கட்சிக்குள் பேசி, ஒரு முடிவிற்கு வருவோம் என சம்பந்தன், மாவை இருவரும் சொன்னதையே திரும்பச் சொல்லி, அந்த விடயத்தை முடித்தார்கள்.
பின்னர் டெனீஸ்வரன் விவகாரத்தை சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். அண்மையில் நடந்த வெலிக்கடை படுகொலை நிகழ்வில் கலந்து கொண்ட வரதராஜபெருமாள் மாகாணசபையை கோமாளியென்றார். அது 38 உறுப்பினர்களையும் குறிக்கிறது. ஓடிப்போன முதலமைச்சரே எங்களை நக்கலடிக்கும் நிலைமையில் உள்ளோம். இந்த நிலைமையில் மாகாணசபையை மேலும் சிரிப்பிடமாக்கும் விசயமாக டெனீஸ்வரன் வழக்கு தொடர்ந்த விசயம் அமைந்துவிட்டது. டெனீஸ்வரனிற்கு பதவி ஆசை இருக்கலாம். ஆனால் அதை பின்னாலிருந்து தூண்டிவிடுவது சுமந்திரன் என்றுதான் நாங்கள் நம்புகிறோம். அப்படித்தான் வெளியிலும் அப்பிராயம் உள்ளது. இது மாகாணசபைக்கும் நல்லதல்ல, கூட்டமைப்பிற்கும் நல்லதல்ல என கூறினார். செல்வம் அடைக்கலநாதனும் இதேவிதமான கருத்தை சொன்னார்.
டெனீஸ்வரன் வழக்கு தொடர்ந்தது தமிழ் அரசியலிற்கு நல்லதல்ல என சிவாஜிலிங்கம் பேச ஆரம்பித்தபோது, அதை ஆமோதித்து தலையசைத்த சம்பந்தன், சுமந்திரனின் பெயர் அதில் சேர்க்கப்பட்டதும், ஒரு நமுட்டு சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்.
புளொட் அமைப்பின் சித்தார்த்தனும், டெனீஸ்வரன் விவகாரம் மாகாணசபைக்கு நல்லதல்ல, இதன்பின்னணியில் சுமந்திரன் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என சொன்னார்.
டெனீஸ்வரன் வழக்கு தொடர்ந்தது தவறானது என கூறிய சம்பந்தன், இந்த விவகாரம் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறதென்பது தனக்கு தெரியவில்லை என்றார். நீதிமன்ற அவமதிப்பு என்ற கட்டத்திற்கு அது சென்றால், தமது தரப்பில் யாராவது பின்னணியில் இருந்தால்கூட அவர்களிடம் சொல்லியும் வழக்கை வாபஸ் வாங்க முடியாது. கிடைக்கிற செய்தியின்படி இது சிக்கலான நிலைமையில் உள்ளது. அது பற்றி கவனம் செலுத்துகிறேன் என சம்பந்தன் சொன்னார்.
இந்த சமயத்தில் தான் நகைச்சுவையாக ஒன்றை கேட்டதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். வழக்கு என்ன கட்டத்தில் இருக்கிறதென தெரியாதென சம்பந்தன் கூறியபோது, இடைமறித்த சிவாஜிலிங்கம்- “கொழும்பில் சட்டத்தரணி கனகஈஸ்வரன் வீட்டில் நீங்கள், விக்னேஸ்வரன் ஐயா ஆகிய மூவரும் அடிக்கடி சந்தித்து பேசுகிறீர்கள். இதையெல்லாம் தெரியாதென்றால், அப்படி வேறு என்னதான் பேசிக்கொள்கிறீர்கள்?“ என சிரித்தபடி ஒரு போடு போட்டாராம்.
மாவை சேனாதிராசாவும் இந்த சந்தர்ப்பத்தில் கச்சிதமாக ஒரு போடு போட்டுள்ளார். “நானும் இதைப்பற்றி பலமுறை தலைவரிடம் கேட்டுவிட்டேன். அவர் பதிலே சொல்லமாட்டேன் என்கிறார்“ என சொல்லிவிட்டு பேசாமல் இருந்து விட்டார்.
10ம் திகதிக்குள் தேசியப்பட்டியல் தொடர்பாக தெளிவான முடிவொன்று அவசியம் என ரெலோ வலியுறுத்தி வந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே முடிவுற்றது.